தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடிய அணுகுமுறை; நிறுவனத்துக்கு எச்சரிக்கை

2 mins read
aa8b2e8c-814c-43c6-b9a0-b8db4f781de4
தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடிய சின்னங்கள், தரநிலைக் குறியீடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்திய ‘ஹோட்டல் பெட் கம்பனி’க்குச் சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. - படம்: சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம்

பயனீட்டாளர்களுக்குத் தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் சின்னங்கள், தரநிலைக் குறியீடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியதற்காகச் சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல்களுக்கு மெத்தைகள், படுக்கை விரிப்புகள், தலையணைகள் போன்றவற்றை விநியோகம் செய்யும் நிறுவனமான ‘ஹோட்டல் பெட் கம்பனி’க்கு சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தவறான புரிதலை ஏற்படுத்தும் அணுகுமுறையை அந்த நிறுவனம் கையாள்வதாகப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, மார்ச் மாதத்தில் ஆணையம் விசாரணை நடத்தியது.

இந்தத் தகவலை ஆணையம் வியாழக்கிழமை (நவம்பர் 20) வெளியிட்டது.

ஹோட்டல் துறை தொடர்பான தரவரிசையில் உயரிய நிலையில் இருப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் அந்நிறுவனம் அதன் இணையப்பக்கத்திலும் இணையவழித் தளங்களிலும் சின்னங்களைப் பயன்படுத்தியது.

ஆனால், அத்தகைய அதிகாரபூர்வ தரவரிசை ஏதும் இல்லை என்று ஆணையம் கூறியது.

‘டிரஸ்ட்பைலட்’ தரவரிசையில் நான்கரை நட்சத்திரம் பெற்றுள்ளதாக அந்நிறுவனத்தின் இணையப்பக்கத்திலும் இணையவழித் தளங்களிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் ‘டிரஸ்ட்பைலட்’ தளத்துடன் ‘ஹோட்டல் பெட் கம்பனி’க்குக் கணக்கு ஏதும் இல்லை என்று ஆணையம் கண்டுபிடித்தது.

இந்தச் சின்னங்களை அந்நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் ‘எச் அண்ட் எஸ்’ உருவாக்கிக் காட்சிப்படுத்தியது.

நிறுவனத்தைக் கடந்த ஜனவரி மாதம் ‘அட்காசா’ நிறுவனத்திடம் ‘எச் அண்ட் எஸ்’ விற்றது.

சின்னங்களும் ‘டிரஸ்பைலட்’ தரநிலை உண்மையானவையா என்பதை ‘அட்காசா’ நிறுவனம் சரிபார்க்கவில்லை. அவற்றை அது தொடர்ந்து பயன்படுத்தியது.

தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடிய அணுகுமுறையைத் தொடங்கி வைத்ததற்காக ‘எச் அண்ட் எஸ்’ நிறுவனத்துக்கு ஆணையம் எச்சரிக்கை விடுத்தது.

அந்த அணுகுமுறையைத் தொடர்ந்ததற்காக ‘அட்காசா’ நிறுவனத்துக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட சின்னங்களையும் தரநிலைக் குறியீட்டையும் அகற்ற ‘அட்காசா’ நிறுவனம் இணங்கியிருப்பதை ஆணையம் சுட்டியது.

குறிப்புச் சொற்கள்