அதிகரித்து வரும் செலவுகள், உள்கட்டமைப்பு அழுத்தங்களுக்குத் தங்களைத் தாங்களே தயார்ப்படுத்திக் கொண்டாலும் கூட, ஏறக்குறைய ஐந்தில் நான்கு தென்கிழக்கு ஆசிய வர்த்தகங்கள் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) பலன்களும் அதன் ஆற்றலும் சுமையை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றன.
தி பிஸ்னஸ் டைம்சும், சந்தை ஆராய்ச்சி நிறுவனமான காந்தாரும் ஏற்பாடு செய்த ஆய்வில் பங்கேற்ற 514 வட்டார வர்த்தகத் தலைவர்களில் 78 விழுக்காட்டினர் ஏஐயின் ஆற்றல், தேவைகளை விட அதிகமாக இருப்பதாகக் கருதுகின்றனர்.
அக்டோபர் 12ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட தி பிஸ்னஸ் டைம்ஸ் இன்சைட்ஸ்: பவர் ஆசியான்ஸ் ஃபியூச்சர் 2026 ஆய்வு, சிங்கப்பூர், வியட்னாம், தாய்லாந்து ஆகியவை இதில் மிக உயர்ந்த நம்பிக்கையுடன் இருப்பதாகக் காட்டியது.
தென்கிழக்கு ஆசியா முழுவதும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு வேகமெடுத்து வரும் வேளையில் இது நிகழ்ந்துள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 62 விழுக்காட்டினர் கடந்த 12 மாதங்களில் செயற்கை நுண்ணறிவு அல்லது தரவு சார்ந்த தொழில்நுட்பங்களில் தங்கள் முதலீடுகளை அதிகரித்துள்ளனர்.
இந்தோனீசியாவில் இந்த வளர்ச்சி குறிப்பாக அதிகமாகக் காணப்படுகிறது. அங்கு 85 விழுக்காட்டு வர்த்தகங்கள் கடந்த ஆண்டில் செயற்கை நுண்ணறிவு முதலீட்டில் மிதமான அளவிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு வரையிலான அதிகரிப்புகளைப் பதிவு செய்துள்ளன.
செயற்கை நுண்ணறிவு குறித்த இந்த வட்டார அளவிலான நம்பிக்கை, திரு சுனில் வீட்டிலுக்கு ஆச்சரியமளிக்கவில்லை. அவரது சிங்கப்பூர் ஆலோசனை நிறுவனமான பெர்டுரா, பசுமை நிதி, ஆற்றல் மாற்றம் ஆகியவற்றில் நிறுவனங்களுக்கு உதவுகிறது.
சரியான பயன்பாட்டுச் சூழல்களில் பயன்படுத்தப்படும்போது, செயற்கை நுண்ணறிவின் பலன்கள் விரைவாகக் கிடைக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். உதாரணமாக, ஆசியான் போன்ற பன்முகத்தன்மை வாய்ந்த ஒரு வட்டாரத்தில் தனித்துவமான நன்மைகளை வழங்கும் பன்மொழி வாடிக்கையாளர் சேவையை இது சாத்தியமாக்கக் கூடும்.
மேலும், ஒட்டுமொத்த ஏஐ பயனீட்டாளர் கட்டண முறையில் ஆற்றல் செலவுகள் தற்போது மிகச் சிறிய பகுதியாக இருப்பதாலும், ஒரு பெருநிறுவனச் சூழலில் ஏஐ பயன்பாடுகளை உருவாக்கும்போது அவை மிகவும் குறைவாக இருக்கிறது என்று ‘இஒய்’ (EY) நிறுவனத்தின் ஆசியான் தரவு, ஏஐ தலைவரான மணிக் பண்டாரி கூறினார்.
ஆற்றல் தேவையானது செயல்பாட்டுச் சவால்களை உருவாக்கும் என்று வர்த்தக நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. அதன்படி, மின்சாரச் செலவுகள் அல்லது செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்தல் என்று ஆய்வில் பங்கேற்றவர்களில் 46 விழுக்காட்டினரும், தற்போதுள்ள உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் என்று 39 விழுக்காட்டினரும், ஆற்றல் வளங்களுக்கான போட்டி அதிகரித்தல் என்று 37 விழுக்காட்டினரும் தெரிவித்தனர்.
