வல்லரசுகளின் கருத்து வேறுபாடுகளுக்கு இடையே ஆசியான் நம்பகமான பாலமாகத் திகழ வேண்டும்: துணைப் பிரதமர் கான்

ஆசிய எதிர்கால உச்சநிலை மாநாடு 2026

வல்லரசுகளின் கருத்து வேறுபாடுகளுக்கு இடையே ஆசியான் நம்பகமான பாலமாகத் திகழ வேண்டும்: துணைப் பிரதமர் கான்

படம்: சுந்தர நடராஜ்

27 Nov 2026 - 11:49 am

3 mins read

ஆசியான், உலக வல்லரசுகளின் கருத்துவேறுபாடுகளுக்கு இடையே நம்பகமான பாலமாகத் திகழ்ந்து உலகளாவிய வர்த்தகம், முதலீட்டுத் தொடர்புகளைப் பேண வேண்டும் என்று துணைப் பிரதமரும் எரிசக்தி, வர்த்தக, தொழில் துறை அமைச்சருமான திரு கான் கிம் யோங் வலியுறுத்தியுள்ளார்.

அத்தகைய கருத்து வேறுபாடுகளை ஆசியானால் தீர்த்துவைக்க முடியாது என்றாலும் பாலமாகத் திகழ்வது முக்கியம் என்றார் அவர்.

மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) நடைபெற்ற ஐந்தாவது ‘ஆசிய எதிர்கால உச்சநிலை மாநாடு 2026’ல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திரு கான் உரையாற்றினார்.

உலக அளவில் புவிசார் அரசியல் பதற்றத்துடன் பொருளியல் தேசியவாதம் தீவிரமடைந்து வருவதைச் சுட்டிய திரு கான், இத்தகைய சூழலில் ஆசியான் நாடுகள் தங்களது எல்லைகளை மூடிக்கொள்ளாமல், தங்களுக்குள்ளான ஒருங்கிணைப்பை ஆழப்படுத்தி உலக நாடுகளுடனான பங்காளித்துவங்களை விரிவுபடுத்த வேண்டும் என்றார்.

கடந்த இரு ஆண்டுகளில் வரி உயர்வு, வர்த்தக நிச்சயமற்ற சூழல் நிலவியபோதும், ஆசியான் பொருளியல் கிட்டத்தட்ட ஐந்து விழுக்காடு வளர்ச்சி கண்டு மீள்திறனுடன் விளங்குவதை அவர் சுட்டினார். எனினும், தற்சார்பை முன்னிறுத்தி நாடுகள் எல்லைகளை மூடும் போக்கு கூடிவருவதாக அவர் எச்சரித்தார்.

“நம்மிடையே தடைகளை ஏற்படுத்துவது ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைக் குறுக்கிவிடும். வளர்ந்துவரும் பொருளியல் தேசியவாதத்தை ஆழமான ஒருங்கிணைப்பின் மூலமும் பரந்த பங்காளித்துவங்களின் வழியுமே ஆசியான் முறியடிக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

கருத்து வேறுபாடுகள் நிலவும் வல்லரசுகளுக்கு இடையே ஆசியான் நம்பகமான பாலமாகத் திகழ்ந்து உலகளாவிய வர்த்தக, முதலீட்டுத் தொடர்புகளைப் பேண வேண்டும் என்று துணைப் பிரதமரும் எரிசக்தி, வர்த்தக, தொழில் துறை அமைச்சருமான திரு கான் கிம் யோங் வலியுறுத்தியுள்ளார்.
கருத்து வேறுபாடுகள் நிலவும் வல்லரசுகளுக்கு இடையே ஆசியான் நம்பகமான பாலமாகத் திகழ்ந்து உலகளாவிய வர்த்தக, முதலீட்டுத் தொடர்புகளைப் பேண வேண்டும் என்று துணைப் பிரதமரும் எரிசக்தி, வர்த்தக, தொழில் துறை அமைச்சருமான திரு கான் கிம் யோங் வலியுறுத்தியுள்ளார். - படம்: சுந்தர நடராஜ்

இப்பாதையில் புவிசார் அரசியல் அதிர்வுகள், பொருளியல் போட்டித்தன்மை, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆகிய மூன்று சவால்களை அவர் குறிப்பிட்டார்.

உக்ரேன், ஈரான் போர்கள் போன்ற தொலைதூர மோதல்கள் அன்றாட விலைவாசியை உயர்த்துவதைச் சுட்டிய திரு கான், ஆசியான் மின்கட்டமைப்பு வழியிலான எல்லை தாண்டிய மின்வர்த்தகம் கூட்டு மீள்திறனை மெய்ப்பித்துள்ளதாகக் கூறினார்.

ஏஐ உற்பத்தித்திறனைப் பெருக்கினாலும் வேலை இழப்புகளையும் அதிவேகக் கணினித் தாக்குதல் அபாயங்களையும் ஏற்படுத்துகிறது என்ற திரு கான், ‘தொழில்நுட்ப மேலாதிக்கத்திற்கான போட்டியும், ஏஐ பாதுகாப்புக்கான ஒத்துழைப்பும் ஒரே நேரத்தில் சாத்தியம்’ என்ற பிரதமர் லாரன்ஸ் வோங்கின் கூற்றையும் மேற்கோள் காட்டினார்.

வட்டார வர்த்தகத்தை எளிதாக்க மேம்படுத்தப்பட்ட சரக்கு வர்த்தக ஒப்பந்தம், அண்மையில் கையெழுத்தான ஆசியான் மின்னிலக்கப் பொருளியல் கட்டமைப்பு ஒப்பந்தம் (DEFA) ஆகியவை உதவும் என்றார் அவர்.

அமெரிக்கா, சீனா ஆகியவற்றுடனான வர்த்தகத் தொடர்புகளைத் தொடர்வதோடு, தென் கொரியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், வளைகுடா நாடுகள் ஆகியவற்றுடனான பங்காளித்துவங்களையும் ஆசியான் விரிவுபடுத்த வேண்டும் என்று திரு கான் கூறினார். இத்தகைய உறவுகள் புதிய வாய்ப்புகளைத் தரும் என்றார் அவர்.

ஒட்டுமொத்த வட்டாரப் பொருளியல் பங்காளித்துவம் (RCEP) உள்ளிட்ட ஒப்பந்தங்களுக்கேற்ப செயல்படும் அதேவேளையில், உலக வர்த்தக அமைப்பின் (WTO) வெளிப்படையான விதிகளுக்கு நாடுகள் மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அடுத்த ஆண்டு ஆசியானின் 60வது ஆண்டுநிறைவில் சிங்கப்பூர் தலைமைப் பொறுப்பை ஏற்கும்போது, வட்டார ஒருங்கிணைப்பையும் பசுமை, மின்னிலக்கப் பொருளியலையும் தீவிரமாக முன்னெடுக்கும் என்று அவர் கூறினார்.

மாநாட்டின் தொடக்கத்தில் வரவேற்புரை ஆற்றிய எஸ்பிஎச் மீடியா நிர்வாகத் தலைவர் சான் யெங் கிட், உலக வர்த்தகத்தின் விதிமுறைகள் தொடர்ந்து மாற்றி எழுதப்பட்டு வருவதைச் சுட்டினார்.

கொள்கை வகுப்பாளர்களையும் வர்த்தகத் தலைவர்களையும் ஒன்றிணைப்பது இம்மாநாட்டின் நோக்கம் என்று எஸ்பிஎச் மீடியா நிர்வாகத் தலைவர் சான் யெங் கிட் தெரிவித்தார்.
கொள்கை வகுப்பாளர்களையும் வர்த்தகத் தலைவர்களையும் ஒன்றிணைப்பது இம்மாநாட்டின் நோக்கம் என்று எஸ்பிஎச் மீடியா நிர்வாகத் தலைவர் சான் யெங் கிட் தெரிவித்தார். - படம்: சுந்தர நடராஜ்

“வர்த்தகத் திறனைக் காட்டிலும் தேசியப் பாதுகாப்பிற்கு நாடுகள் முன்னுரிமை அளிக்கின்றன. புவிசார் அரசியல் மீள்திறனை மையமாகக் கொண்டு விநியோகத் தொடர்கள் மறுவடிவமைக்கப்படுகின்றன,” என்ற திரு சான், ‘ஏஐ’ போன்ற அதிநவீனத் தொழில்நுட்பங்கள் பாரம்பரியப் போட்டி வலிமையின் வரைமுறையை மாற்றி அமைத்து வருவதாகக் கூறினார்.

சிங்கப்பூர் போன்ற துடிப்பான ஆசியப் பொருளியல்களின் எதிர்காலம் நம்பிக்கையளிப்பதாக இருந்தாலும் விரைவாக மாறும் சூழலை எதிர்கொள்ளக் கூர்மையான மதிப்பீடுகளும் பங்காளித்துவமும் தேவை என்றார் அவர்.

கொள்கை வகுப்பாளர்களையும் வர்த்தகத் தலைவர்களையும் ஒன்றிணைத்து, குறுகியகாலத் தடைகளுக்கு அப்பால் சிந்தித்து, உலகளாவிய மாற்றங்களைச் செயல்படக்கூடிய வாய்ப்புகளாக மாற்றுவதே இம்மாநாட்டின் நோக்கம் என்று திரு சான் தெரிவித்தார்.

‘எழுச்சிபெறும் ஆசியா: புதிய உலகளாவிய ஒழுங்கில் வட்டாரத்தின் பங்கை வடிவமைத்தல்’ என்ற கருப்பொருளில் இவ்வாண்டின் மாநாடு அமைந்தது. இம்மாநாட்டை எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் ஐந்து முன்னணி ஊடகங்களான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், பிஸ்னஸ் டைம்ஸ், சாவ்பாவ், பெரித்தா ஹரியான், தமிழ் முரசு ஆகியவை முதன்முறையாக ஒன்றிணைந்து வழங்குகின்றன.

வட்டாரத்தின் முக்கியக் கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை சார்ந்த நிபுணர்கள், வர்த்தகத் தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு ஓசிபிசி வங்கி முதன்மை ஆதரவாளராகச் செயல்படுகிறது. அமேசான் வெப் சர்வீசஸ் அதிகாரபூர்வ ‘கிளவுட்’ பங்காளியாகவும் மரினா பே சேண்ட்ஸ் அதிகாரபூர்வ இடவசதி பங்காளியாகவும் இணைந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்