2026ஆம் ஆண்டில் மின்னிலக்கப் பொருளியல் ஒப்பந்தத்தில் ஆசியான் கையெழுத்திடும்

2 mins read
0dbb368d-afd3-4847-adeb-0a3d943f2f7f
மின்னிலக்கப் பொருளியல் கட்டமைப்பு ஒப்பந்தம் குறித்த சிறப்பு ஆசியான் பொருளியல் சமூக மன்றக் கூட்டத்தில் சிங்கப்பூர் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான் கிம் யோங் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) உரையாற்றினார். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: அடுத்த ஆண்டில் ஒரு மின்னிலக்கப் பொருளியல் ஒப்பந்தத்தில் ஆசியான் கையெழுத்திட உள்ளது.

இது வர்த்தகங்கள், இவ்வட்டாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் மின்னிலக்கச் சந்தையைப் பயன்படுத்த அதிக வாய்ப்புகளைத் திறந்துவிடும்.

கோலாலம்பூரில் நடைபெற்ற 26வது ஆசியான் பொருளியல் சமூக மன்றக் கூட்டத்தில், ஆசியான் மின்னிலக்கப் பொருளியல் கட்டமைப்பு ஒப்பந்தம் (டிஇஎஃப்ஏ) குறித்த பேச்சுவார்த்தைகள் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) ஒரு உத்தேச முடிவுக்கு வந்தன.

அக்கூட்டத்தில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த துணைப் பிரதமர் கான் கிம் யோங், இதை ஒரு ‘குறிப்பிடத்தக்க திருப்புமுனை’ என்று வருணித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆசியான் அடுத்த ஆண்டுக்குள் இந்த ஒப்பந்தத்தை இறுதிசெய்து கையெழுத்திடும் என்றார்.

“பொருளியல் வளர்ச்சிக்கு மின்னிலக்கமயமாக்கல் ஒரு முக்கிய உந்துசக்தியாக மாறியுள்ளது. நமது தரநிலைகள், வழிகாட்டுதல்களை ஒத்திசைக்க ஆசியான் உறுப்பினர்கள் ஒரு வழியைக் கண்டுபிடிப்பது முக்கியம். இதனால் நமது அமைப்புமுறைகள் ஒன்றோடொன்று ஈடுகொடுத்து இயங்க முடியும்,” என்று அவர் கூறினார்.

வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான், இந்த ஒப்பந்தம் ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு மின்னிலக்கமயமாக்கப்பட்ட வர்த்தக ஆவணங்கள், மின்னிலக்க வர்த்தகம் மற்றும் தொடர்புடைய பிற வாய்ப்புகளை நோக்கி முன்னேற ஓர் அடித்தளமாக இருக்கும் என்றார்.

உலகின் முதல் பெரிய வட்டார அளவிலான மின்னிலக்கப் பொருளியல் ஒப்பந்தம் என்று கூறப்படும் ஆசியான் மின்னிலக்கப் பொருளியல் கட்டமைப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் 2023 செப்டம்பரில் அதிகாரபூர்வமாகத் தொடங்கின. இதில் மின்னிலக்க வர்த்தகம், எல்லை தாண்டிய மின்வர்த்தகம், இணையப் பாதுகாப்பு, மின்னிலக்க அடையாளம், மின்னிலக்கக் கட்டணங்கள், எல்லை தாண்டிய தரவுப் பகிர்வு போன்றவை உள்ளடக்கப்பட்டிருக்கும்.

ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன், ஆசியானின் மின்னிலக்கப் பொருளியலின் மதிப்பு, 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2 டிரில்லியன் அமெரிக்க டாலராக இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“ஆசியான் அமைப்பு, 2026ஆம் ஆண்டில் பேச்சுவார்த்தையை முடித்து ஆசியான் மின்னிலக்கப் பொருளியல் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை எதிர்பார்க்கிறது,” என்று மலேசியாவின் முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸஃப்ருல் அஸிஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

அக்டோபர் 24 அன்று கையெழுத்திடப்பட்ட மேம்பட்ட ஆசியான் சரக்கு வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் திரு கான் விளக்கினார்.

“இது பொருள்களின் வர்த்தகத்தை எளிதாக்குகிறது, கட்டணங்களைக் குறைக்கிறது. அதே நேரத்தில் சுங்கச் செயல்முறைகளை எளிதாக்குவதன் மூலம் வரியற்ற தடைகளை நீக்குகிறது அல்லது குறைக்கிறது,” என்றார் அவர்.

“உலகளாவிய ரீதியில் மிகவும் சவாலான சூழல் இருந்தபோதிலும், ஆசியானில் நமது ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து வலுப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம் என்பதை உலகின் பிற பகுதிகளுக்கு எடுத்துக்காட்டுவதாக உள்ளதால், இந்த ஒப்பந்தம் முக்கியமானது,” என்றும் திரு கான் எடுத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்