செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆசியாவின் பங்கு

ஆசிய எதிர்கால உச்சநிலை மாநாட்டில் ‘ஏஐ’ கலந்துரையாடல்

செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆசியாவின் பங்கு

படம்: சுந்தர நடராஜ்

27 Nov 2026 - 6:44 pm

3 mins read

தொழில்நுட்பம், பொருளியல், ஊழியரணி ஆகியவற்றின்மீது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கொண்டுள்ள தாக்கத்தை ஐந்தாம் ஆசிய எதிர்கால உச்சநிலை மாநாட்டில் நடந்த “ஆசியா செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தை வடிவமைக்குமா?” என்ற கலந்துரையாடல் அங்கம் ஆராய்ந்தது. இதில் ஆசியாவின் பங்குபற்றி விவாதிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஓசிபிசி குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி டான் டெக் லோங், ட்ரிப்.காம் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி ஜேன் சன், டெமுஸ் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி சங் ரென் யோங், அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமைச் செயற்கை நுண்ணறிவு நிபுணர் ஆரன் செம்ஃப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இணை ஆசிரியர் ஜெரமி அவ் யோங் வழிநடத்தினார்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உண்மையான முதலீட்டுப் பலன், செலவுவையும் பணியாளர்களையும் குறைப்பதற்கு மாறாக வருவாயைப் பெருக்குவதிலேயே உள்ளது என்று திரு டான் கூறினார்.

செயற்கை நுண்ணறிவின் உண்மையான முதலீட்டுப் பலன், வருவாயைப் பெருக்குவதிலேயே உள்ளதென ஓசிபிசி குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி டான் டெக் லோங் (நடுவில்) கூறினார்.
செயற்கை நுண்ணறிவின் உண்மையான முதலீட்டுப் பலன், வருவாயைப் பெருக்குவதிலேயே உள்ளதென ஓசிபிசி குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி டான் டெக் லோங் (நடுவில்) கூறினார். - படம்: சுந்தர நடராஜ்

நிறுவனங்கள் தொழில்நுட்பத்தின்மீது மட்டும் கவனம் செலுத்தாமல் செயற்கை நுண்ணறிவை ஆக்ககரமான முறையில் பயன்படுத்த ஒட்டுமொத்த வணிகச் செயல்முறைகளை மறுவடிவமைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

“செயற்கை நுண்ணறிவால் வேலைகள் பறிபோகும் அச்சம் நிலவிவருகிறது. ஆனால், அதன் பயன்பாடு கடினமான பணிகளை எளிதாக்கி மனித பந்தங்களை மையமாகக் கொண்ட வேலைகளுக்குக் கூடுதல் ஊழியர்களைப் பணியமர்த்த உதவுகிறது,” என்று திருவாட்டி சன் கூறினார்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வேலைகளைப் பறிப்பதைவிட உருவாக்க உதவுகிறது என ட்ரிப்.காம் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி ஜேன் சன் (வலம்) கலந்துரையாடலில் கூறினார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வேலைகளைப் பறிப்பதைவிட உருவாக்க உதவுகிறது என ட்ரிப்.காம் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி ஜேன் சன் (வலம்) கலந்துரையாடலில் கூறினார். - படம்: சுந்தர நடராஜ்

தனிப்பட்ட ஊழியர்களிடையே செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு அதிகமாக இருந்தாலும் 5 முதல் 10 விழுக்காட்டிற்கும் குறைவான நிறுவனங்களே நிறுவன அளவிலான மாற்றத்தை அடைந்துள்ளதாகத் திரு சங் சுட்டினார்.

நிறுவனங்கள் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மூன்று அல்லது நான்கு முக்கிய இலக்குகளில் தங்கள் வளங்களை ஒருமுகப்படுத்துவதற்கு மாறாக நிறைய சிறிய இலக்குகளில் கவனம் செலுத்துவதால் செயற்கை நுண்ணறிவுச் செயல்பாட்டை விரிவுபடுத்தச் சிரமப்படுகின்றன என்று பேச்சாளர்கள் கூறினர்.

ஊழியர்களுக்குப் புதிய, திறன்மிகு செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை வாங்கிக்கொடுப்பது மட்டுமின்றி அதை நிறுவனத்தின் செயல்பாட்டில் ஒன்றிணைப்பதிலும் முக்கிய கவனம் செலுத்த வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.

ஆரம்பநிலை வேலைவாய்ப்புகள் மேலும் சிக்கலான உயர்நிலைப் பணிகளாக உருமாறி வருகின்றன என்று பேச்சாளர்கள் குறிப்பிட்டனர்.

அதனால் மனப்பாடம் செய்யப்பட்ட சூத்திரங்களைச் சோதிப்பதற்குப் பதிலாகச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கையாளும் திறன், மீள்திறன், படைப்பாற்றல், சிக்கலான சூழல்களுக்குத் தீர்வுகாணும் திறன் ஆகியவற்றை விண்ணப்பதாரர்களிடம் நிறுவனங்கள் மதிப்பிடத் தொடங்கியுள்ளன என்றும் அவர்கள் கோடிகாட்டினர்.

அமெரிக்க, சீன செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் என இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டுமே பயன்படுத்துவதற்கு மாறாக நிறுவனங்கள் இரண்டையும் இணைத்துப் பயன்படுத்துவது சாமர்த்தியமாக இருக்கும் என்று பேச்சாளர்கள் குறிப்பிட்டனர்.

இந்த மாநாட்டை எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் முன்னணி ஊடகங்களான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், பிஸ்னஸ் டைம்ஸ், சாவ்பாவ், பெரித்தா ஹரியான், தமிழ் முரசு ஆகியவை முதன்முறையாக ஒன்றிணைந்து நடத்துகின்றன.

இந்நிகழ்ச்சிக்கு ஓசிபிசி வங்கி முதன்மை ஆதரவாளராகச் செயல்படுகிறது. அமேசான் வெப் சர்வீசஸ் அதிகாரபூர்வ ‘கிளவுட்’ பங்காளியாகவும் மரினா பே சேண்ட்ஸ் அதிகாரபூர்வ இடவசதிப் பங்காளியாகவும் இணைந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்