அடுத்தவரின் கடப்பிதழைப் பயன்படுத்தி சிங்கப்பூரைவிட்டு வெளியேற முயன்ற வெளிநாட்டவர்

1 mins read
22301611-fcea-44b2-a2ac-5f8dacf58760
மற்றொருவரின் கடப்பிதழைப் பயன்படுத்திக் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாகத் தப்பிச் செல்ல முயன்ற ஆஸ்திரேலிய ஆடவர் கைது செய்யப்பட்டார். - படம்: பிக்சாபே

மற்றொருவரின் கடப்பிதழைப் பயன்படுத்திச் சிங்கப்பூரை விட்டு வெளியேற முயன்ற எல் சையது அலாவுதீன் எனும் 28 வயது ஆஸ்திரேலிய ஆடவருக்கு எட்டு மாதங்கள், இரண்டு வாரச் சிறைத்தண்டனையும் $6,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த டிசம்பர் 14ஆம் தேதி அவர் சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவரது பயணப்பையில் கத்திகள், கை முட்டிக்காப்புகள் (Knuckle dusters) போன்ற தடை செய்யப்பட்ட பொருள்கள் சில காணப்பட்டன.

மேற்கொண்டு விசாரிப்பதற்காக அந்த விவகாரம் காவல்துறையிடம் கொண்டுசெல்லப்படும் என்று கூறிய குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகளை நோக்கி அலாவுதீன் தகாத சொற்களைக் கூறினார்.

விசாரணை நடைபெறும்போது அலாவுதீன் சிங்கப்பூரை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் நோக்கில் அதிகாரிகள் அவரது கடப்பிதழைப் பறிமுதல் செய்தனர்.

இருப்பினும், மற்றொருவரின் கடப்பிதழைப் பயன்படுத்தி, டிசம்பர் 28ஆம் தேதி உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக அலாவுதீன் தப்பிச் செல்ல முயன்றார். ஆணைய அதிகாரிகள் அவரைக் கைது செய்து, டிசம்பர் 30ஆம் தேதி அவர் மீது குற்றம் சுமத்தினர்.

அலாவுதீன் அந்தக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து, பிப்ரவரி 21ஆம் தேதி அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

மற்றொருவரின் கடப்பிதழைப் பயன்படுத்திய குற்றத்துக்குப் பத்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ $10,000 வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

அரசாங்க அதிகாரிகளைத் தரக்குறைவாகப் பேசிய குற்றத்துக்கு 12 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையோ $5,000 வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்