புதுப்பிக்கப்பட்ட பீஷான் பணிமனையில் தானியக்க வசதிகள், இயந்திர மனிதர்கள்

2 mins read
fbf74ad9-4cbe-4c1c-83af-9c83185467f7
பீஷான் பணிமனையில் புதிதாக இடம்பெற்றுள்ள தூக்கு மேசையை ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயக்கும் ஊழியர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எஸ்எம்ஆர்டி நிறுவனம் $7 மில்லியன் செலவில் மேம்படுத்தி உள்ள பீஷான் பணிமனையில் பல்வேறு புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) கூறியது.

அந்த ஈராண்டு மேம்பாட்டுத் திட்டத்தில், பணிமனையின் பழுதுபார்ப்பு ஆற்றலை இரட்டிப்பாக்கும் வகையில் தானியக்க அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

அதன் மூலம் அந்தப் பணிமனையில் மாதந்தோறும் முழுமையாக பழுதுபார்க்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை இரண்டில் இருந்து நான்காக அதிகரிக்கும்.

எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் வடக்கு-தெற்கு பாதையில் இயங்கும் ரயில்களுக்குச் சேவையாற்றி வரும் பீஷான் ரயில் பணிமனை தோற்றுவிக்கப்பட்டு 39 ஆண்டுகள் ஆகின்றன.

சிங்கப்பூரின் ஆகப் பழைய ரயில் பணிமனை அது.

காலத்திற்கேற்ப மாற்றம் செய்யும் வகையில் தற்போது நவீன சாதனங்கள் அங்கு பொருத்தப்பட்டுள்ளன. பணிமனையின் அன்றாட வேலை நடைமுறைகளை நெறிப்படுத்துவது மேம்பாட்டுப் பணிகளின் முக்கிய நோக்கம்.

புதிய தானியக்க வாகனங்களும் இயந்திர மனிதர்களும் பணிமனையின் மனிதவளத் தேவையில் 30 விழுக்காட்டை மிச்சப்படுத்தி இருப்பதாக எஸ்எம்ஆர்டி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

‘டெப்போ 4.0’ என்ற பெயரில் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

வருங்காலப் பணிமனையின் வடிவமைப்புக்கும் மேம்பாட்டுக்கும் ஒரு வழிகாட்டியாக மேம்பாட்டுப் பணிகள் அமையும் என்று கடந்த ஜூலை மாதம் எஸ்எம்ஆர்டி கூறியது.

சிங்கப்பூரின் ரயில் கட்டமைப்பு விரிவடைவதாலும் அதிகமான ரயில்கள் சேவையில் இணைக்கப்படுவதாலும் அதற்கேற்ற வகையில் பராமரிப்பு வசதிகளும் மனிதவளமும் அதிகம் தேவைப்படுகின்றன.

எண்ணிக்கை சுருங்கி, மூத்தோர் அதிகரித்திருக்கும் ஊழியரணியை சிங்கப்பூர் கொண்டிருக்கும் வேளையில் இப்படிப்பட்ட தேவை எழுந்திருப்பதாக எஸ்எம்ஆர்டி சொன்னது.

மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்திருப்பதால், ஏறத்தாழ 55 காற்பந்துத் திடல் அளவுக்குப் பரந்து விரிந்திருக்கும் பீஷான் பணிமனையில் இனி எல்லா ரயில்களின் முழுமையான பழுதுபார்ப்புப் பணிகளும் நடைபெறும்.

அதனால், பழுதுபார்ப்புப் பணிகளில் ஈடுபட்டு இருக்கும் மற்றொரு பணிமனையான துவாஸ் வெஸ்ட் பணிமனை இனி வேறுவிதமான பராமரிப்புப் பணிகளில் கவனம் செலுத்தும்.

பொதுவாக, 500,000 கிலோமீட்டர் மற்றும் 1 மில்லியன் கிலோமீட்டர் தூரம் ஓடிய ரயில்கள் முழுமையான பழுதுபார்ப்பில் ஈடுபடுத்தப்படும். அப்போது ரயில்களின் பல்வேறு பாகங்களும் மாற்றப்படும்.

குறிப்புச் சொற்கள்