தொடர்ந்து ‘பிரகாசமான’ நிலையில் விமானப் போக்குவரத்துத் துறை: சீ ஹொங் டாட்

1 mins read
5aee51ba-55db-49cb-a88f-4e3cca98467d
போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், சிலேத்தார் ஏரோஸ்பேஸ் பார்க்கில் உள்ள ‘ஏர்பஸ் சிங்கப்பூர் கேம்பஸ்’ வளாகத்தைச் சுற்றிப் பார்த்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கொந்தளிப்பான, நிச்சயமில்லாத உலகச் சூழலில் சிங்கப்பூரின் விமானப் போக்குவரத்துத் துறை தொடர்ந்து ‘பிரகாசமாக’ இருந்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.

அத்துறையில் தற்போது ஏறக்குறைய 36,000 பேர் பணிபுரிவதாக அவர் புதன்கிழமை (மே 7) சொன்னார். இதன்படி, கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பு அத்துறையில் 35,000 பேர் பணியாற்றினர். அந்த எண்ணிக்கையை இது தாண்டியுள்ளது.

விமானப் போக்குவரத்துத் துறையில் அண்மைய ஆண்டுகளாக வேலை நியமன நிலவரம் 2019ல் இருந்த நிலைக்குத் திரும்பியுள்ளது. மே 2023ல் கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பிருந்த நிலையில் 90 விழுக்காட்டையும் ஆகஸ்ட் 2023ல் 95 விழுக்காட்டையும் அது தொட்டது.

விமானப் போக்குவரத்துத் துறையில் முக்கியப் பங்கு வகிக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சாங்கி விமான நிலையக் குழுமம், சேட்ஸ் நிறுவனம் உள்ளிட்டவை தொடர்ந்து ஊழியர்களைப் பணியமர்த்தி வருவதாகவும் அவை விரிவாக்கம் காண ஆராய்ந்து வருவதாகவும் திரு சீ கூறினார்.

சிலேத்தார் ஏரோஸ்பேஸ் பார்க்கில் உள்ள ‘ஏர்பஸ் சிங்கப்பூர் கேம்பஸ்’ வளாகத்தைச் சுற்றிப் பார்த்த அவர், அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.

மேலும் வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்ட துறைகளில் விமானப் போக்குவரத்து, கடற்துறை, விநியோகத் தொடர், தளவாடம் உள்ளிட்டவை அடங்கும் என்றார் அவர்.

விமானப் போக்குவரத்து ஊழியரணியை மேம்படுத்துவது குறித்துப் பேசிய திரு சீ, தானியக்கமும் மின்னிலக்கமயமும் ஊழியர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் வேலை நடைமுறைகளின் செயல்திறனை அதிகரிக்கவும் உதவலாம் என்றார்.

குறிப்புச் சொற்கள்