விலங்குக் காப்பக வழிகாட்டி நெறிமுறைகள்: கருத்துச் சொல்ல பொதுமக்களுக்கு அழைப்பு

விலங்குக் காப்பக வழிகாட்டி நெறிமுறைகள்: கருத்துச் சொல்ல பொதுமக்களுக்கு அழைப்பு

2 mins read
708721a5-bf87-4673-9f03-f07b2b5ec4e0
செல்லப் பிராணிகள் துறையின் தரத்தை உயர்த்தும் ஒட்டுமாத்த முயற்சிகளின் ஒரு பகுதியாக புதிய வழிமுறைகள் பரிசீலிக்கப்படுகின்றன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் விலங்குகளுக்கானக் காப்பகங்களை அமைப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து கருத்துத் தெரிவிக்குமாறு விலங்குநல மருத்துவச் சேவை (AVS) பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளது.

செல்லப் பிராணிகள் துறையின் தரத்தை உயர்த்தும் ஒட்டுமாத்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, விலங்குக் காப்பகங்களுக்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகள் பரிசீலிக்கப்படுகின்றன.

அதன் மீது பொதுமக்களின் கருத்துகளைச் சேகரிக்கும் பொருட்டு, இணையம் வழியான ஆய்வை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) ஏவிஎஸ் தொடங்கி உள்ளது. 2025 பிப்ரவரி 2ஆம் தேதி வரை அந்த ஆய்வில் பங்கேற்றுக் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

உத்தேசிக்கப்பட்டு உள்ள வழிகாட்டி முறைகள் மீது யோசனைகளைத் தெரிவிப்பதோடு, அவற்றில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்களையும் பொதுமக்கள் குறிப்பிடலாம்.

அந்த ஆய்வு, காப்பகங்களின் தரத்தை மதிப்பிடுவதோடு காப்பகங்களில் விலங்குகளை குடியமர்த்துதல், அவற்றை நிர்வகித்தல் மற்றும் விலங்குகளின் சுகாதாரப் பராமரிப்பிலும் கவனம் செலுத்தும்.

தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ், அது பற்றிய ஃபேஸ்புக் பதிவு ஒன்றை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) வெளியிட்டார்.

காப்பகங்களிடையே பொதுவான விலங்குநல தரத்தை ஏற்படுத்துவது தொடர்பாக விலங்குநல அமைப்புகளுடன் ஏவிஎஸ் கலந்துபேசி வருவதாக அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

விலங்குகளின் சுகாதாரத்தையும் நல்வாழ்வையும் பாதுகாப்பதில் காப்பகங்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் திரு டான் தெரிவித்துள்ளார்.

நடப்பில் உள்ள விலங்குக் காப்பகங்கள் அவற்றின் சொந்த நடைமுறையிலும் தரத்திலும் இயங்குகின்றன. காப்பகத்தில் விலங்குகளை அடைப்பது, பராமரிப்பது மற்றும் அவற்றுக்கு மறுவாழ்வு வழங்குவது போன்ற பணிகளை அந்தந்தக் காப்பகங்களே முடிவு செய்கின்றன.

சிங்கப்பூரில் தற்போது உள்ள காப்பகங்களை ஏறக்குறைய 15 விலங்குநல அமைப்புகள் நடத்துகின்றன. அவற்றுக்கான நிதியை அந்தந்த அமைப்புகள் ஏற்றுக்கொள்கின்றன அல்லது அவற்றுக்காகப் பொதுமக்கள் நன்கொடை வழங்குகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்