அனைத்துலக அளவில் போட்டித்தன்மை அதிகரித்துவரும் நிலையில், வர்த்தகத் துறையில் சிங்கப்பூரின் மதிப்பை அதிகரிக்க மூன்று நிலை அணுகுமுறையைக் கையாள்வதாகத் துணைப்பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
அமைப்புகளுக்கு இடையிலும் வர்த்தகங்களுடனும் இணைந்து பணியாற்றும் முறைகளை வலுப்படுத்துதல், தொழில்நுட்ப உதவியுடன் செயல்திறனை மேம்படுத்துதல், விதிமுறைகள் புத்தாக்க முயற்சிகளுக்கு ஏற்ப அமைவதை உறுதிசெய்தல் ஆகியவையே அம்மூன்று அணுகுமுறைகள்.
நிறுவனச் சார்புக் குழு - சிங்கப்பூர்த் தொழில் கூட்டமைப்பு விருதுகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற துணைப்பிரதமரும் வர்த்தக, தொழில்துறை அமைச்சருமான திரு கான், பொருளியலிலும் வணிகத்திலும் உலகளாவிய மாற்றங்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் அதனை எதிர்கொள்ள மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகள் குறித்தும் பேசினார்.
கடந்த ஏப்ரல் மாதம், அமைப்புகளுக்கு இடையிலான ஒழுங்குமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள நிறுவனச் சார்புக் குழு விதி மதிப்பாய்வுக் குழு அமைக்கப்பட்டதை அவர் சுட்டினார். அதுமுதல் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 170 வர்த்தக சங்கத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியதையும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க அமைப்புகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பிற்காகச் சிறிய, நடுத்தரத் தொழில்களுக்கான நிறுவனச் சார்புக் குழு அலுவலகம் அமைக்கப்பட்டதாகத் துணைப் பிரதமர் கான் கூறினார்.
சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றத்தின் ஹலால் சான்றிதழ் விண்ணப்ப மின்னிலக்கமயம், வர்த்தக, தொழில்துறை அமைச்சுடன் தேசியச் சுற்றுப்புற அமைப்பு இணைந்து தொடங்கிய ‘உணவங்காடி வணிகராகுதல்’ (Becoming a Hawker) கட்டமைப்பு, குறைந்த கரிம ஆற்றல் மாற்றத்துக்கு ஆதரவளிக்கும் மெய்நிகர் மின்நிலையம் ஆகிய முன்னெடுப்புகள் குறித்தும் அவர் பேசினார்.
நிறுவனச் சார்புக் குழு - சிங்கப்பூர்த் தொழில் கூட்டமைப்பு விருதுகள் 2025
‘வலுவான பங்காளித்துவம் மூலம் அறிவார்ந்த ஒழுங்குமுறைகள்’ எனும் கருப்பொருளில் நிறுவனச் சார்புக் குழு - சிங்கப்பூர்த் தொழில் கூட்டமைப்பு விருது விழா நடைபெற்றது.
‘எம் ஹோட்டல்’ அரங்கில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) நடைபெற்ற இவ்விழாவில் புத்தாக்க முயற்சிகள், அர்த்தமுள்ள பங்காளித்துவம் உள்ளிட்ட பல்வேறு வகையில் சிங்கப்பூர் வர்த்தகச் சூழலுக்குப் பங்களித்த 13 அமைப்புகளுக்கு விருது வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
நிறுவனச் சார்புக் குழு தாக்கம், பங்காளித்துவம், நிறுவனச் சார்புக் குழு ஆய்வு ஆகிய இரு பிரிவின்கீழ் பொதுத்துறை, தனியார் துறை அமைப்புகள் விருது பெற்றன.
விருது வழங்கிச் சிறப்பித்த துணைப் பிரதமர் கான், “இவ்விருதுகள், சிங்கப்பூரை வணிகம் செய்வதற்கு ஏற்ற சிறந்த, போட்டித்தன்மையுள்ள இடமாக மாற்ற உதவியவர்களை அங்கீகரிக்கின்றன,” என்றார்.
செலவு, நேரம், கரிம வெளியேற்றம் ஆகியவற்றைக் கணிசமாகக் குறைத்து, நிலையான விநியோகத் தொடரை உறுதிசெய்யச் சிங்கப்பூர் சுங்கத்துறையுடன் இணைந்து பணியாற்றிய ஜூரோங் துறைமுக நிறுவனத்திற்கு நிறுவனச் சார்புக் குழு தாக்கம், பங்காளித்துவப் பிரிவில் விருது வழங்கப்பட்டது.
நிறுவனத்தின் துணைத் தலைவர் துரைசிங்கம் சிவக்குமார், “தடையற்ற வணிக மண்டலத்துக்கும், வரிவிதிப்பு மண்டலத்துக்கும் இடையிலான சரக்குப் பரிமாற்றங்களை வாகனங்களுக்குப் பதிலாகக் கடத்துபட்டைகளைப் (Conveyor Belt) பயன்படுத்தும் முன்னெடுப்பை ஈராண்டுகளுக்குமுன் தொடங்கினோம்,” என்றார்.
இதுவரை ஏறத்தாழ 10 மில்லியன் டன் அளவிலான பொருள்களை அவ்வகையில் விநியோகம் செய்ததாகக் கூறிய அவர், அது 23,000 டன் அளவு கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்துள்ளதாகவும் சொன்னார்.
‘எதிர்காலத்திற்கான அறிவார்ந்த ஒழுங்குமுறைகள்: வலுவான ஒழுங்குமுறைச் சூழல்மூலம் வளர்ச்சியையும் மீள்திறனையும் மேம்படுத்துதல்’ எனும் தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெற்றது.
பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தலைவர்கள் பங்கேற்ற அந்நிகழ்ச்சியில் எதிர்காலத் திட்டங்கள், முன்னெடுப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

