புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தெம்பனிஸ் பொலிவார்ட் பிரிவு குடியிருப்பாளர்களின் பிரதிநிதியாக தெம்பனிஸ் குழுத்தொகுதி எம்.பி.யான பே யாம் கெங் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுத் தேர்தலுக்குப் பிறகு தொகுதியின் உள்ளேயே செய்யப்பட்ட எல்லை மாற்றங்களுக்குப் பிறகு தாம் அந்தப் பிரிவுக்குப் பொறுப்பேற்பதாக திரு பே யாம் கெங் தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்து உள்ளார்.
தெம்பனிஸ் குழுத்தொகுதியில் மசெக வேட்பாளராகப் புதிதாக இணைந்து வெற்றிபெற்ற முன்னாள் ராணுவப் பிரிவுத் தலைவர் டேவிட் நியோவுக்கு தெம்பனிஸ் நார்த் வட்டாரம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதுவரை அந்த வட்டாரப் பிரதிநிதியாக திரு பே இருந்து வந்தார்.
அது பற்றி தமது பதிவில் திரு பே குறிப்பிடும்போது, “நேற்று நான் தெம்பனிஸ் நார்த் வட்டாரத்தை டேவிட்டுக்குச் சுற்றிக் காண்பித்தேன். மேலும், அங்குள்ள குடியிருப்பாளர்களிடம் அவரை அறிமுகம் செய்து வைத்தேன்.
“தெம்பனிஸ் நார்த் வட்டாரக் குடியிருப்பாளர்கள் என்னை ஒரு குடும்ப உறுப்பினராக ஏற்றுக்கொண்டதுபோல டேவிட்டையும் அவர்கள் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்.
“2011ஆம் ஆண்டு முதன்முறை நான் அந்தப் பகுதிக் குடியிருப்பாளர்களைச் சந்தித்தபோது அளித்த அதே வரவேற்பை அவருக்கும் வழங்குவார்கள் என்று கருதுகிறேன்,” என்று திரு பே வியாழக்கிழமை (மே 15) தமது ஃபேஸ்புக் பதிவில் கூறினார்.
தெம்பனிஸ் அவென்யூ 9 வடபகுதி புதிய வீடுகளை உள்ளடக்கும் தெம்பனிஸ் பொலிவார்ட் வட்டாரம், தெம்பனிஸ் நார்த், தெம்பனிஸ் ஈஸ்ட், தெம்பனிஸ் சென்ட்ரல் ஆகியவற்றில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு உருவாக்கப்படும். புதிய எல்லை மாற்றங்கள் ஜூன் 1 முதல் நடப்புக்கு வரும்.
தொடர்புடைய செய்திகள்
குழுத்தொகுதி எம்.பி.க்களுக்கு இடையில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு இந்த மாற்றங்கள் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார் ஐந்தாவது முறை எம்.பி. ஆக வெற்றிபெற்று உள்ள திரு பே.

