சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவியான எம். சுருதி, கணக்காய்வுத் திறனைப் பயன்படுத்தி சமூகத்திற்குப் பயனளிக்கும் பணித்திட்டங்களைச் செய்திருக்கிறார்.
சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வர்த்தகத்தையும் நிதிக்கல்வியையும் பயின்று தம் துறைக்குத் தேவையான திறன்களை அவர் வலுப்படுத்திக்கொண்டார்.
பெற்றோர்கள் கூறியதால் 16 வயதிலிருந்து சொந்தக் கணக்கு வழக்குகளை எழுதத் தொடங்கினார் சுருதி. அந்தப் பழக்கம், பிறகு கணக்காய்வுத் துறை மீதான அவரது ஆர்வத்தைத் தூண்டியது.
‘கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு’ என்ற வாசகத்திற்கு ஏற்ப, கணக்காய்வைக் கற்க ஆரம்பித்தபோது சுருதிக்கு முதலில் அத்துறை சுவையற்றதாக இருந்தது. இருந்தபோதும், அந்தத் திறனுக்குரிய மதிப்பை உணர்ந்து மனம் ஒன்றிப் படித்தார்.
பின்னர் மோசடிகளிலிருந்து காத்துக்கொள்ள முதியோருக்குப் பன்மொழிகளில் கற்பிக்கும் ‘சிமி ஸ்கேம்’, இளையர்களைச் சாதிக்க ஊக்குவிக்கும் ‘டிஜி அப்’ போன்றவை தொடர்பான பணித்திட்டங்களில் சுருதி ஈடுபட்டார்.
பிறர் பயனடையும் முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கியபோது, உழைத்து உருவாக்கிய திறன்கள் அவருக்குக் கைகொடுத்தன.
சுருதியும் நண்பர்கள் சிலரும் தொடங்கிய ‘டிஜி அப்’, சமூகநல வர்த்தகமாக மாறி, ‘எஸ்ஜி வெஞ்சர் ஃபார் குட் எனர்ஜைஸ்’ அமைப்பின் $50,000 மானியத்தைப் பெற்றது.
‘பேநவ்’ சேவையை எப்படி பயன்படுத்துவது, கிடைத்த மின்னஞ்சல் மோசடி மின்னஞ்சலா என்பன போன்ற சந்தேகங்கள் எழுந்தால் அவற்றுக்குத் தேவையான குறிப்புகளைச் சுவையாகப் புகட்டுகின்றன ‘டிஜி அப்’ பணித்திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட விளையாட்டுகள்.
தொடர்புடைய செய்திகள்
விரிவுரையாளர்களும் குடும்பத்தாரும் கொடுத்த உற்சாகத்தால் சுருதி உட்பட ஐந்து பேர் கொண்டுள்ள ஒரு குழு, ‘இளையர் செயல் சவால்’ (Youth Action Challenge) திட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சேர்ந்தது.
நான்கு மாதங்கள் நீடிக்கும் இத்திட்டத்தின் மூலம் இளையர்கள் பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களின் வழிகாட்டுதலைப் பெறுவர்.
இத்தகைய வழிகாட்டுதல் மிகவும் பயனுள்ளது என்று கூறும் சுருதி, “எனது திறன்களை அடையாளம் காண பெற்றோர் உதவினர். எனது கணக்குத் திறனையும் பிறருடன் எளிதில் பழகும் திறனையும் கண்டு வர்த்தகத் துறையில் படிக்கும்படி ஊக்குவித்தனர்,” என்றார்.

