ஐரோப்பாவுக்கு முதல்முறையாகச் சென்று விடுமுறையை உல்லாசமாகக் கழிக்கலாம் என்று நினைத்த 75 வயது சிங்கப்பூரர் ஒருவருக்குச் சோதனைக் காலம் காத்திருந்தது.
தமது வங்கி அட்டைகளும் $2,000க்குமேல் மதிப்புடைய ரொக்கமும் இருந்த பை திருட்டுப் போனதை அறிந்து ஸெங் அதிர்ச்சியுற்றார்.
தம் உறவினர் ஒருவருடன் நவம்பர் 20ஆம் தேதி உல்லாசக் கப்பலில் ஐரோப்பாவுக்கு 12 நாள் பயணத்தை இவர் தொடங்கினார்.
“பெரும்பாலான நேரம், நாங்கள் கப்பலிலேயே இருந்தோம். துறைமுகத்தில் கப்பல் நிறுத்தப்பட்டால் மட்டுமே நாங்கள் அதிலிருந்து இறங்குவோம். நவம்பர் 29ஆம் தேதி ஸ்லோவாக்கியா சென்ற நாங்கள், அங்கிருந்த கிறிஸ்துமஸ் சந்தைக்குச் சென்றோம்,” என்றார் ஸெங்.
தமது முதிய வயதில் கரடு முரடான நடைபாதைகளில் நடந்து சென்றால் சோர்வடைந்து விடுவோமோ என்ற கவலை இருந்ததால், உடைமைகள் இருந்த தமது தோள் பையைப் பயணப்பைக்குள் வைத்துவிட்டு இவர் கப்பலிலிருந்து இறங்கினார்.
பின்னர், கப்பலுக்குத் திரும்பியதும் தமது பயணப்பையிலிருந்து கைப்பேசியை எடுக்க நினைத்தபோது ஸெங்கிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. திறந்த நிலையில் இருந்த பயணப்பைக்குள் தோள் பையைக் காணவில்லை.
அந்தப் பையில் ஒரு கடப்பிதழ், ஓர் அடையாள அட்டை, பல்வேறு வங்கி அட்டைகள், ஏறக்குறைய $2,000 ரொக்கம் இருந்தன.
இதையடுத்து, சுற்றுப்பயண வழிகாட்டிக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்த ஸெங், காவல்துறையிடமும் புகார் அளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“பயணத்தின் கடைசி இரு நாள்களில், எதையும் ரசிப்பதற்கு எனது மனநிலை சரியில்லை. எனவே, எங்கும் செல்லாமல் நான் கப்பலிலேயே இருந்தேன்,” என்று சொன்ன ஸெங், தமது உடைமைகள் களவு போனதால் ஒட்டுமொத்த பயணமும் பாதிக்கப்பட்டதாக வருந்தினார்.

