சிறுவயதிலிருந்தே பிடோக்கில் வளர்ந்த 30 வயது உயிரி மருத்துவ விஞ்ஞானி ஷிஃப்பானா ஆர்ஏவுக்கு, இப்பேட்டையுடன் பின்னிப் பிணைந்த நினைவுகள் ஏராளம்.
அக்கம்பக்கத்தினரிடையே நிலவும் அன்பும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் மனப்பான்மையும் பிடோக்கைத் தமது மனத்திற்கு நெருக்கமான இடமாக்கியுள்ளதாக அவர் கூறினார்.
அவரது பெற்றோரும் சிறுவயது முதலே பிடோக்கில் வசித்து வருவதால், கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு அவரது குடும்பம் இப்பேட்டையில் வேரூன்றியுள்ளது. இப்பகுதியை விட்டுப் பிரிய குடும்பத்தில் யாருக்கும் மனமில்லை என்றார் அவர்.
“வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட குடும்பங்கள் இங்கு வசித்தாலும், ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு ஒரே குடும்பமாக வாழ்கிறோம். சிங்கப்பூரில் எந்தப் பேட்டையாக இருந்தாலும் நம் பிடோக் போல வராது,” என்றார் ஷிஃப்பானா.
பழைய பிடோக் பேருந்து முனையம், அப்பகுதியில் கிடைக்கும் பலவகை உணவுகள் எனச் சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்த அவர், ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் மிதிவண்டி ஓட்டுவதையும் விரும்புவதாகக் கூறினார்.
அங்குள்ள சைக்கிள் பாதை தொடர்ந்து பராமரிக்கப்படுவது, குடியிருப்பாளர்களின் தேவைகளுக்குக் கவனம் செலுத்தப்படுவதைக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஷிஃப்பானா உள்ளிட்ட 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள், சனிக்கிழமை (நவம்பர் 28) மாலை பிடோக் சவுத் வட்டாரப் பூங்காவில் நடைபெற்ற பிடோக்கின் 50ஆம் ஆண்டுநிறைவு விழாவில் கலந்துகொண்டனர்.
மனிதவள; கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சரும் தொகுதி ஆலோசகருமான தினேஷ் வாசு தாஸ் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னாள் தொகுதி ஆலோசகர்களான பேராசிரியர் எஸ்.ஜெயக்குமார், திரு லிம் சுவீ சே, திரு ஹெங் சுவீ கியட் ஆகியோரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திரு தினேஷ், முன்னாள் தொகுதி ஆலோசகர்கள் அமைத்த வலுவான அடித்தளத்தின் தொடர்ச்சியாக பிடோக்கின் அடுத்தகட்ட வளர்ச்சி அமையும் என்றார்.
தற்போது பிடோக் குடியிருப்பாளர்களில் கிட்டத்தட்ட 30 விழுக்காட்டினர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று குறிப்பிட்ட அவர், பேஷோரில் அமையவுள்ள நான்கு புதிய தேவைக்கேற்ப கட்டப்படும் வீடமைப்புத் திட்டங்கள் இளம் குடும்பங்களை இப்பகுதிக்கு ஈர்க்கும் என்றார்.
புதிய குடியிருப்பாளர்களின் தேவைகளை நிறைவேற்ற ஐந்து பாலர் பள்ளிகளும், வழக்கமான மையங்களைவிட மும்மடங்கு பெரிய, 500 சதுர மீட்டர் பரப்பளவிலான குடியிருப்பாளர் குழு மையமும் அமைக்கப்படவுள்ளன.
அத்துடன், டிசம்பரில் திறக்கப்படவுள்ள பிடோக் சவுத், சுங்கை பிடோக் பெருவிரைவு ரயில் நிலையங்களும், 2030ல் திறக்கப்படவுள்ள சிங்கப்பூரின் ஆகப் பெரிய சஃப்ரா மன்றமும் இப்பகுதியின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும்.
1981ல் திறக்கப்பட்ட பிடோக் சமூக மன்றமும் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, 2030க்குப் பின்னர் பயன்பாட்டுக்கு வரும் வகையில் புதிதாகக் கட்டப்படும்.
மூத்தோருக்கான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திலான பல் பரிசோதனை, தேவையுள்ளோர் தாங்கள் விரும்பும் 14 மளிகைப் பொருள்களைத் தேர்ந்தெடுத்துப் பெறக்கூடிய சமூகக் கடை, உடற்குறையுள்ளோருக்கான சேவை மையம் ஆகியவையும் குடியிருப்பாளர்களின் தேவைகளைக் கருத்தில்கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் திரு தினேஷ் கூறினார்.
தற்போது பிடோக்கில் வசிக்கும் 18 வயது புண்யா சாஹ்னியின் பெற்றோர், அவர் பிறப்பதற்கு முன்பு இரண்டு ஆண்டுகள் பிடோக்கில் வசித்தனர். பின்னர் வேறு பகுதிக்குக் குடிபெயர்ந்த குடும்பம், அவரது தந்தையின் விருப்பத்தின்பேரில் மீண்டும் பேஷோருக்குத் திரும்பியது.
கத்தோலிக்க தொடக்கக் கல்லூரியில் அண்மையில் படிப்பை முடித்துள்ள புண்யா, மாணவர் வாழ்க்கையின் பரபரப்புக்கு இடையே இங்குள்ள நண்பர்களும் அவர்களுடன் ஒன்றுகூடுவதற்கான இடங்களும் தமக்கு மன அமைதியையும் உறுதுணையையும் தருவதாகக் கூறினார்.
“கடற்கரைக்கு அருகிலேயே நான் தங்கியிருப்பதால், ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் அடிக்கடி மிதிவண்டியில் உலா வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்,” என்றார் அவர்.
பிடோக் பழைய பேட்டை என்ற அடையாளத்தைத் தாண்டி அதன் நற்பெயர் தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்று விரும்பும் புண்யா, இளையர்கள் விளையாட்டில் ஈடுபடுவதற்கு ஓட்டப்பாதை உள்ளிட்ட கூடுதல் விளையாட்டு வசதிகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பிடோக்கிலேயே பிறந்து வளர்ந்த 18 வயது தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் முகம்மது ஹஸ்ருல் அப்துல் மாலிக்கிற்கு, இப்பேட்டையின் சமூகப் பிணைப்பே மிகவும் பிடித்த அம்சம்.
அக்கம்பக்கத்தினர் தம்மைச் சந்திக்கும்போதெல்லாம் நலம் விசாரிப்பதுடன், வெவ்வேறு வயது, இனப் பின்னணிகளைக் கொண்ட குடியிருப்பாளர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதாக அவர் கூறினார்.
அண்மையில் அனைத்துலகப் பளுதூக்கும் போட்டியில் உலகச் சாதனை படைத்தபோது, அச்செய்தி வெளியானதைத் தொடர்ந்து அண்டைவீட்டார் பலரும் தமது வீட்டுக்கு நேரில் வந்து வாழ்த்தியதை அவர் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.
வெவ்வேறு இனங்களையும் வயதுப் பிரிவுகளையும் சேர்ந்தவர்கள் வசித்தாலும், பிடோக்கில் குடியிருப்பாளர்களிடையே நிலவும் ஆதரவு தொடர வேண்டும் என்பதே அவரது விருப்பம்.
“அடுத்த 50 ஆண்டுகளிலும் நாம் அனைவரும் ஒரு பெரிய குடும்பமாக ஒற்றுமையுடன் கைகோத்து, ஒருவருக்கொருவர் துணைநிற்க வேண்டும்,” என்றார் ஹஸ்ருல்.
