மசே நிதி மோசடி மின்னஞ்சல்கள் குறித்து எச்சரிக்கை

மசே நிதி மோசடி மின்னஞ்சல்கள் குறித்து எச்சரிக்கை

2 mins read
0e9eb5e0-4977-4656-82d9-1b9b975fa6ca
தூண்டுகளவு மின்னஞ்சல் வந்தால் உடனடியாக அதனை அழித்துவிடும்படி அறிவுறுத்தப்படுகிறது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கூடுதலாகச் செலுத்தப்பட்ட மத்திய சேம நிதித் தொகையைத் திரும்பப் பெற தகுதி இருப்பதாகக் கூறி வரும் மின்னஞ்சல்கள் மோசடியாக இருக்கலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘மசே நிதி அதிகப்படியான தொகை செலுத்தல் - திரும்பப் பெறும் அறிவிப்பு’ என்ற தலைப்பில் போலித் தூண்டுகளவு (phishing) மின்னஞ்சல் அனுப்பப்படுவதாகப் புதன்கிழமை (ஆகஸ்ட் 19) வெளியிட்ட அறிக்கையில் மசே நிதிக் கழகம் தெரிவித்துள்ளது.

அந்த மின்னஞ்சலில், மிகையாகச் செலுத்தப்பட்ட தொகையைப் பெற தகுதி இருப்பதாகக் கூறி, அதை உறுதிப்படுத்த இணைய இணைப்பு ஒன்றைச் சொடுக்குமாறு மோசடிப் பேர்வழிகள் கேட்டுக்கொள்வர்.

இத்தகைய மோசடியால் இதுவரை எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர், எவ்வளவு பணம் பறிபோனது என்பன போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

உண்மையான மின்னஞ்சல் போலக் காட்டுவதற்காக மோசடிப் பேர்வழிகள் மசே நிதிக் கழகத்தின் அதிகாரத்துவ முத்திரையைப் பயன்படுத்துகின்றனர்.

@cpf.gov.sg அல்லது @e.cpf.gov.sg ஆகிய மின்னஞ்சல் முகவரிகள் மூலமாக மட்டுமே மசே நிதிக் கழகம் தனது உறுப்பினர்களைத் தொடர்புகொள்ளும்.

எனவே, மோசடி மின்னஞ்சல்களில் வரும் இணைப்புகளைச் சொடுக்கவோ, கோப்புகளை பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும், தனிப்பட்ட விவரங்களையோ அல்லது சிங்பாஸ் விவரங்களையோ பகிர வேண்டாம் என்றும் அந்த மின்னஞ்சலை உடனடியாக அழித்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டு இடம்பெற்ற மோசடிகளில் அரசாங்க அதிகாரிகள் போன்று ஆள்மாறாட்டம் செய்தது ஐந்தாவது ஆக அதிக மோசடிகளாகப் பதிவாயின. 2024ல் 1,504ஆக இருந்த அவ்வகை மோசடிகளின் எண்ணிக்கை, 2025ல் 3,363ஆகக் கூடியது.

அத்துடன், அவற்றின்மூலம் இழக்கப்பட்ட தொகையின் மதிப்பும் கிட்டத்தட்ட 60 விழுக்காடு கூடியது. அதாவது, 2024ல் $151.3 மில்லியன் பறிபோன நிலையில், 2025ல் அத்தொகை $242.9 மில்லியனாக அதிகரித்தது.

குறிப்புச் சொற்கள்
போலிமோசடிமின்னஞ்சல்மத்திய சேம நிதி