அமெரிக்க நிதித் துறை அதிகாரிகள் கள்ளப் பணப் பரிவர்த்தனை தொடர்பான அவர்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாகப் பிரின்ஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்களையும் அதன் நிறுவனர் சென் சீயின் நடவடிக்கைகளையும் அமெரிக்காவுடன் இணைந்து சிங்கப்பூரும் விசாரித்து வருகின்றது.
அமெரிக்க நிதித் துறை இதுவரையில் S$19.4 பில்லியன் மதிப்புள்ள ‘பிட்காய்ன்’ எனப்படும் மின்னிலக்க நாணயங்களைப் பறிமுதல் செய்துள்ளது.
அதனோடு சிங்கப்பூரில் வாகனங்களை வாடகைக்கு விடும் எஸ்ஆர்எஸ் ஆட்டோ என்ற நிறுவனத்தின் உரிமையாளர் டான் இயூ கியட் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நிறுவனம் குங் சொங் ரோட்டில் செயல்படுகிறது. கடந்த வாரம் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் அவர் கைது செய்யப்பட்டார்.
“கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் தொடர்வதால் வேறு விவரங்களை வெளியிட முடியாது,” என்று காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கம்போடிய நாட்டவரான சென் சீயின் நடவடிக்கைகளையும் அவரைச் சார்ந்த நிறுவனங்களைப் பற்றியும் விசாரிப்பதாகச் சிங்கப்பூர்க் காவல்துறை உறுதிப்படுத்தியது.
சென், கம்போடியாவைத் தளமாகக் கொண்டு பல நாடுகளில் சொத்துச் சந்தை, வாகனக் கடன் மற்றும் நிதி நிறுவனங்கள் உள்ளடங்கிய பிரின்ஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தை நடத்தி வந்துள்ளார்.
அமெரிக்கா அந்நிறுவனத்தின் மீது தடைகள் விதித்து, பல பில்லியன் மதிப்புள்ள அதன் சொத்துகளை முடக்கிவைத்துள்ளது. கம்போடியப் பகுதிகளில் வெளிநாட்டினரைக் கட்டாய வேலைகளில் அமர்த்தியது, நிதி மோசடி ஆகியவற்றுக்காக அக்டோபர் 14ஆம் தேதி அமெரிக்கா அவர்மீது குற்றம் சாட்டியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அந்த மோசடி நடவடிக்கைகளில் சிங்கப்பூரில் உள்ள நிதி, வாகனக் கடன், வாடகை சார்ந்த நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளதாக அறியப்படுகிறது.

