சிங்கப்பூரில் கொரியன் ‘பாப்’ இசைக்குழுவான ‘பிளாக்பிங்க்’ இம்மாதம் இசை நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளது.
தேசிய விளையாட்டரங்கில் நவம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் மூன்று நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
அந்நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச்சீட்டுகள் தொடர்பில் நடக்கும் மோசடி குறித்து விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
அக்டோபரிலிருந்து குறைந்தது 11 புகார்கள் ‘பிளாக்பிங்க்’ இசை நிகழ்ச்சி நுழைவுச்சீட்டு மோசடி தொடர்பில் வந்ததாகவும் கிட்டத்தட்ட 6,000 வெள்ளி பறிபோனதாகவும் காவல்துறை வியாழக்கிழமையன்று (நவம்பர் 20) தெரிவித்தது.
டெலிகிராம், கரோசல், சியாவ்ஹொங்ஷு, டிக்டாக், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகள் குறித்து வெளியான போலி விளம்பரங்களை நம்பி பணத்தைப் பறிகொடுத்ததாகப் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெற போலி நுழைவுச்சீட்டுகளின் படங்களையும் காணொளிகளையும் மோசடிப் பேர்வழிகள் அவர்களிடம் காட்டினர்.
நுழைவுச்சீட்டுகளின் இருப்பு குறைவாக உள்ளதால் உடனடியாகப் பணத்தைச் செலுத்தும்படி வாடிக்கையாளரிடம் மோசடிக்காரர்கள் கூறுவர்.
பணம் செலுத்தியபின் நுழைவுச்சீட்டுகள் கிடைக்கவில்லை என வாடிக்கையாளர்கள் கேட்டால், நீங்கள் செலுத்திய பணம் வரவில்லை எனக் கூறி கூடுதலாகப் பணம் செலுத்தும்படி மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அழுத்தம் கொடுப்பர் எனக் காவல்துறை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
மோசடிக்காரர்களைத் தொடர்புகொள்ள முடியாதபோதுதான் தாம் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்டவர்கள் அறிகின்றனர்.
எனவே, ‘பிளாக்பிங்க்’ இசை நிகழ்ச்சிக்கான அதிகாரபூர்வ நுழைவுச்சீட்டு விற்பனைத் தளமான ‘டிக்கெட்மாஸ்டர்’ (Ticketmaster) இடமிருந்து மட்டுமே நுழைவுச்சீட்டைப் பெறும்படி ரசிகர்களைக் காவல்துறை கேட்டுக்கொண்டது.

