மக்களுக்கு மிகவும் பிடித்த, ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஊக்குவிக்கும் உணவங்காடி நிலையமாக புக்கிட் கான்பெரா உணவங்காடி நிலையம் தேர்வாகி திங்கட்கிழமை (நவம்பர் 24) இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது.
இவ்வாண்டின் சிங்கப்பூர் உணவங்காடிக் கடைக்காரர்கள் விருது நிகழ்ச்சியில் புக்கிட் கான்பெரா உணவங்காடி நிலையத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது.
சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் ஆதரவில் சிங்கப்பூர் வர்த்தகர் சங்கச் சம்மேளனம் (The Federation of Merchants’ Associations, Singapore) ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஊக்குவிக்கும் உணவங்காடி நிலையத்துக்கான விருதை இவ்வாண்டு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆரோக்கியமான பொருள்களைப் பயன்படுத்தும் அதிக அளவிலான கடைகள் கொண்ட ஐந்து உணவங்காடி நிலையங்களின் பட்டியலில் அதிக பொதுமக்களின் வாக்குகளை புக்கிட் கான்பெரா உணவங்காடி நிலையம் பெற்று விருதை வென்றது.
துடிப்பான சூழல், மாறுபட்ட உணவு மற்றும் நீடித்த சமூக மனப்பான்மை ஆகியவற்றால் பொது வாக்கெடுப்பு மூலம் மக்களுக்கு மிகவும் பிடித்த உணவங்காடி நிலையமாகவும் அது மற்றுமொரு விருதைப் பெற்றது.
சிங்கப்பூர் எக்ஸ்போ வளாகத்தின் ‘ப்லிஸ் கார்டன்’ உணவகத்தில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மற்றும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யான் கலந்துகொண்டார்.
உணவங்காடி நிலையத்தில் அமர்ந்து பல உணவு வகைகளைச் சுவைத்து வளர்ந்த நினைவுகளைப் பகிர்ந்த திருவாட்டி கோ, உணவங்காடிக் கலாசாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதையும் சுட்டிக்காட்டினார்.
“உணவங்காடிக் கலாசாரத்தின் மையமாக இருக்கும் நமது வர்த்தகர்களை அரசாங்கம் தொடர்ந்து எல்லா வழிகளிலும் ஆதரிக்கும்,” என்று அவர் உறுதியளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
‘ஒரு தேசத்தைக் கொண்டாடுதல், உணவங்காடி வர்த்தகர்களைக் கௌரவித்தல்’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மேலும் ஒன்பது வர்த்தகர்கள் மூன்று பிரிவுகளில் விருதுகளைப் பெற்றனர்.
தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் சிங்கப்பூரின் உணவங்காடிக் கலாசாரத்துக்குப் பங்களிக்கும் வர்த்தகர்களைப் பாராட்டும் விருதை பெற்றவர்களில் ஒருவர் சைய்யது அப்துல் ரஹ்மான், 64.
தந்தையின் ஆட்டிறைச்சி சூப் வியாபாரத்தை 2005ஆம் ஆண்டு பொறுப்பேற்று தன் மனைவியுடன் 20 ஆண்டுகள் ஆடம் ரோடு உணவங்காடி நிலையத்தில் வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறுகிறார் திரு சைய்யது.
தற்போது அவரது மூத்த மகன் வர்த்தக பொறுப்புகளை அவரிடமிருந்து கற்றுக்கொண்டு வருகிறார்.
விருது பெற்றது ‘எதிர்பாராத ஒன்று’ என்றும், குறிப்பாக தனது மனைவியின் ஆதரவால் இந்த வெற்றி சாத்தியமானது என்றும் தெரிவித்தார் திரு சைய்யது.
“என் தந்தை விட்டுச் சென்ற இந்த வியாபாரத்தில், அவரது கைப்பக்குவத்தை நான் தொடர்ந்து கட்டிக் காத்து வந்தேன். இப்போது என் மகனுக்கும் அந்த அனுபவத்தைக் கற்றுக்கொடுக்க விரும்புகிறேன்,” என்றார் அவர்.

