மீள்திறனுடன் செயல்பட வர்த்தகங்கள் கட்டமைப்புகளை விரிவுபடுத்த வேண்டும்: அதிபர் தர்மன்

2 mins read
cb06c72f-9a59-4f22-a8df-4a107bdff80e
மெக்சிகோ சிட்டியில் உள்ள ஜேடபிள்யூ மேரியட் ஹோட்டலில் சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளன, சிங்கப்பூர் உற்பத்தித்துறை சம்மேளன உறுப்பினர்களுடனும் மெக்சிகோ வர்த்தகச் சங்கத் தலைவர்களுடனும் பேசும் அதிபர் தர்மன் சண்முகரத்னம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

உலகளாவிய பொருளியலில் நிலையற்றதன்மை நிலவி வரும் நிலையில், மீள்திறனுடன் செயல்பட வர்த்தகங்கள் பல்வகைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவற்றின் கட்டமைப்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் வலியுறுத்தியுள்ளார்.

இதன் காரணமாகத்தான் சரக்குகள், தொழில்நுட்பங்கள், முதலீடுகள் ஆகியவற்றுக்கு இடையூறு ஏதும் ஏற்படாதிருக்க புதிய வட்டார ஏற்பாட்டை சிங்கப்பூர் உருவாக்கி வருவதாக அவர் கூறினார்.

டிரான்ஸ் பசிபிக் பங்காளித்துவத்துக்கான முழுமையான, முற்போக்குமிக்க ஒப்பந்தத்தைத் திரு தர்மன் சுட்டினார்.

அந்தப் பங்காளித்துவத்தில் 12 நாடுகள் இடம்பெறுகின்றன. அவற்றில் சிங்கப்பூரும் மெக்சிகோவும் அடங்கும்.

ஐரோப்பிய ஒன்றியம் போன்ற மற்ற வட்டாரக் கட்டமைப்புகளுடன் எவ்வாறு மேலும் ஒத்துழைத்துச் செயல்படுவது என்பது குறித்து டிரான்ஸ் பசிபிக் பங்காளித்துவம் ஆராய்ந்து வருவதாக அதிபர் தர்மன் தெரிவித்தார்.

இவ்வாண்டு, சிங்கப்பூரும் மெக்சிகோவும் அவற்றுக்கு இடையிலான அரசதந்திர உறவின் அரை நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடுவதாக அவர் கூறினார்.

அதிகாரபூர்வ உறவுகளுக்கு முன்பே இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவும் பகிரப்பட்ட இலக்கும் இருந்ததாகத் திரு தர்மன் தெரிவித்தார்.

இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்பு கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதாக அவர் கூறினார். வர்த்தகக் கப்பல்கள் மெக்சிகோவிலிருந்து ஆசியாவுக்கு வெள்ளிக் கட்டிகளை ஏந்திச் சென்றதாகவும் ஆசியாவிலிருந்து மெக்சிகோவுக்குப் பட்டு, மசாலாப் பொருள்கள் ஆகியவற்றைக் கொண்டு சென்றதாகவும் ஜேடபிள்யூ மேரியட் ஹோட்டல் மெக்சிகோ சிட்டி பொலான்கோவில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார் அதிபர் தர்மன்.

“அதுவே முதல், மிகப் பெரிய டிரான்ஸ் பசிபிக் வர்த்தகம்,” என்றார் அதிபர் தர்மன்.

மெக்சிகோவின் வெள்ளிக் கட்டிகள் 1800களில் ஆசியாவில் பரவலாகக் கிடைத்தன. பிரிட்டிஷ் மலாயாவிலும் சிங்கப்பூரிலும் அவை அதிகளவில் பயன்பாட்டில் இருந்தன. 1819ஆம் ஆண்டில் சிங்கப்பூரை வர்த்தக மையமாக சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ் நிறுவியபோது, மெக்சிகோ வெள்ளிக் கட்டிகளைப் பயன்படுத்தி சுல்தானுக்குப் பணம் செலுத்தினார். இத்தகவலை நிகழ்வின்போது அதிபர் தர்மன் பகிர்ந்துகொண்டார்.

தென்கிழக்காசியாவையும் லத்தீன் அமெரிக்காவையும் இதுவரை இல்லாத அளவுக்கு நேரடியாக இணைக்கும் புதிய, விரிவான கடல்வழிப் பாதைக்கு பசிபிக் கூட்டணி-சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வழிவகுக்கும் என்றார் திரு தர்மன்.

பசிபிக் கூட்டணி-சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மெக்சிகோ, சிலி, கொலம்பியா, பெரு ஆகிய நாடுகளை சிங்கப்பூருடன் இணைக்கிறது.

இந்த ஒப்பந்தம் 2022ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டது.

“இரண்டு வட்டாரங்களையும் இணைக்கும்போது வர்த்தக வாய்ப்புகள் பேரளவில் உருவாகும். உணவு வியாபாரம், புதிய மற்றும் மீள்திறன்மிக்க உற்பத்தித்துறை விநியோகச் சங்கலிகள் மேம்படுத்தப்படுவது, குறைவான கரிம வெளியேற்ற பொருளியலுக்கு மாறுவது, செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, கிட்டத்தட்ட ஒவ்வொரு துறையிலும் உற்பத்தித் திறனை அதிகரிப்பது ஆகியவற்றில் வாய்ப்புகள் கிடைக்கும்,” என்று அதிபர் தர்மன் கூறினார்.

மெக்சிகோவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் தர்மனுடன் சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம், சிங்கப்பூர் உற்பத்தித்துறை சம்மேளனம் ஆகியவற்றைச் சேர்ந்த பேராளர்களும் சென்றுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்