கரிம வரி உயர்வு: விவரங்கள் கோரும் பசுமைக் குழுக்கள்

2 mins read
7c3503e0-7379-49b8-bf4a-122f3eb7dfeb
கரியமில வாயுவை அதிக அளவில் வெளியேற்றும் நிறுவனங்கள் சிலவற்றுக்கு வரிக் “கழிவுகள்” கொடுக்கப்படுவதாகக் கூறுவது பற்றி வெளிப்படையான தகவல்களை அரசாங்கம் தரவேண்டும் என்றும் குழுக்கள் வலியுறுத்தின - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.

கரிம வரி 2028ஆம் ஆண்டிலிருந்து எவ்வளவு உயர்த்தப்படும் என்பதை அரசாங்கம் இன்னும் தெளிவாகத் தெரிவிக்கவேண்டும் என்று சுற்றுப்புறக் குழுக்கள் சில கோரியுள்ளன.

கரியமில வாயுவை அதிக அளவில் வெளியேற்றும் நிறுவனங்கள் சிலவற்றுக்கு வரிக் “கழிவுகள்” கொடுக்கப்படுவதாகக் கூறுவது பற்றி வெளிப்படையான தகவல்களை அரசாங்கம் தரவேண்டும் என்றும் அவை வலியுறுத்தின.

நான்கு குழுக்கள் அரசாங்கத்திற்கு அனுப்பிய கடிதம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) வெளியிடப்பட்டது. கரிம வரி உயர்வுக்கு இடையே கூடுதல் மின்சாரக் கட்டணங்களிலிருந்து குறைந்த வருமானக் குடும்பத்தினரைப் பாதுகாக்கும்படி அதிகாரிகளை அவை கேட்டுக்கொண்டன.

இளையர் அமைப்பான எனெர்ஜி கோலேப் (Energy CoLab), சுற்றுப்புறக் குழுக்களான லெப்பாக்இன்எஸ்ஜி (LepakInSG), எஸ்ஜி கிளைமேட் ரேலி (SG Climate Rally), பருவநிலை நடவடிக்கைக்கான சிங்கப்பூர் இளையர் ஆகியவையே அந்த நான்கு குழுக்கள்.

கரியமில வாயுக்களின் வெளியேற்றத்தை நிறுவனங்கள் குறைக்கவேண்டும் எனும் நோக்கத்துடன் சிங்கப்பூர், கரிம வரியை அறிமுகப்படுத்தியது.

2024, 25ஆம் ஆண்டுகளில் வெளியேற்றப்படும் ஒரு டன் கரியமில வாயுக்கான வரி $5இலிருந்து $25க்கு அதிகரிக்கப்பட்டது.

2026, 27ல் அது டன்னுக்கு $45யாக உயர்த்தப்படும். 2030ல் வரி விகிதம் டன்னுக்கு $50 முதல் $80 வரை கூட்டப்படக்கூடும் என்று அரசாங்கம் இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.

“கரிம வரி டன்னுக்கு $45க்கும் மேல் அதிகரிக்கப்படும் சூழலில் 2028க்கு முன்னரே அது முடிவுசெய்யப்பட வேண்டும். நிறுவனங்கள் புதிய வரிக்குத் தயாராவதற்குப் போதிய அவகாசம் தேவை. வரியையும் அதன் தொடர்பான மற்ற நடவடிக்கைகளையும் மறு ஆய்வு செய்ய இதுதான் தகுந்த நேரம்,” என்று கடிதம் குறிப்பிட்டது.

அவ்வாறு செய்வதன் மூலம் பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகளையும் கருத்துகளையும் திரட்டுவதற்குப் போதிய நேரம் கிடைக்கும் என்று சுற்றுப்புறக் குழுக்கள் தெரிவித்தன.

சிங்கப்பூரில் கரிம வரி செலுத்தும் சுமார் 50 நிலையங்கள் செயல்படுகின்றன. அவற்றுள் பெரும்பாலானவை உற்பத்தி, எரிசக்தி, கழிவு, நீர்வளத் துறைகளைச் சேர்ந்தவை. நாட்டின் ஒட்டுமொத்தக் கரியமில வாயு வெளியேற்றத்தில் அவற்றின் பங்கு ஏறக்குறைய 70 விழுக்காடு.

குறிப்புச் சொற்கள்