சிங்கப்பூரின் அனைத்து வட்டாரங்களிலும் ரொக்கமில்லாப் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் கடைகள் இயங்கிவருகின்றன. இந்த கட்டணமுறை சில இளையர்களையும் பெரியவர்களையும் தனிமைப்படுத்தியுள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்றில் சுகாதாரத்தை முன்னிட்டு அறிமுகமான ரொக்கமில்லாப் பரிவரித்தனை, நாளடைவில் கடை உரிமையாளர்களுக்கு ஒருவித வசதியை அமைத்துக்கொடுத்துள்ளது.
சில்லறைகளை வைத்திருக்க வேண்டிய அவசியத்தை நீக்கியுள்ள இந்தக் கட்டணமுறை ஒருகாலத்தில் ரொக்கம் மட்டுமே என்று இருந்ததை நினைவூட்டுகிறது. பல கடைகளில் ரொக்கமில்லாப் பரிவர்த்தனை மட்டுமே எனும் அறிவிப்பைக் காண்பது வழக்கமாகிவிட்டது.
குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு கட்டண அட்டை பயன்படுத்தும் வசதிகள் எளிதில் அமைவதில்லை. பல நவீனமயமான உணவுக் கடைகளில் எதையும் வாங்கமுடியாமல் வெறுங்கையுடன் ஏமாந்து திரும்பியதை சில மாணவர்கள் எண்ணி கவலையடைந்தனர்.
“அரசாங்கம் மேற்கொண்ட ‘கோ டிஜிட்டல்’ (go-digital) மின்னிலக்க இயக்கங்களின் வெற்றி இதற்கான காரணம்” என்று சிங்கப்பூர் நிர்வாக பல்கலைக்கழகத்தின் லீ கொங் சியான் வர்த்தக பள்ளியின் இணைப் பேராசிரியர் ஃபு பாங் ஜியான் கூறினார்.
அரசாங்கம் அறிவார்ந்த தேசம் என்ற இலக்கை அடைய மானியங்களை வழங்கியது. சிறு, நடுத்தர நிறுவனங்கள் திட்டத்தை கையிலெடுத்ததால், வர்த்தகர்கள் ரொக்கமற்ற கட்டணமுறையை குறைந்த செலவில் எளிதாக செயல்படுத்த முடிந்தது. திருட்டு, தவறான தொகை போன்ற பிரச்சினைகளும் இதனால் தவிர்க்கப்படும்.
புகிஸ், ஆர்ச்சர்ட், சாமர்செட், டோபி காட் ஆகிய இடங்களில் உள்ள பெரும் கடைத்தொகுதிகளில் 100 கடைகளில் 14 கடைகள் மட்டுமே ரொக்கமற்ற பரிவர்த்தனை அறிவிப்புகளை வைத்திருந்தன. பிரபல உணவுக் கடைகள் வசதி, சுகாதாரம் வாடிக்கையாளர்கள் விருப்பம் ஆகியவற்றால் ரொக்கமில்லா முறையை கடைப்பிடிக்கின்றன. கூட்ட நெரிசைலைச் சமாளிக்கவும் அது உதவுகிறது. பள்ளிகள் அருகில் இயங்கும் குறிப்பிட்ட உணவுக் கடைகள் ரொக்கத்தை ஏற்கின்றன.
‘பேநவ்’ போன்ற மின் கட்டணங்களைக் கைப்பேசியில் பயன்படுத்தத் தெரியாத முதியோர்களும் உள்ளனர். ரொக்கத்தையே பயன்படுத்திப் பழகியோர் ரொக்கம் வாங்காத கடைகளைத் தவிர்ப்பதாகவும் கூறுகின்றனர்.