706 அறை லண்டன் ஹோட்டலை $480 மில்லியனுக்கு வாங்கிய சிங்கப்பூர் நிறுவனம்

2 mins read
4d79c5c9-28ad-4d3c-aa8c-04c62ad26ae4
கென்சிங்டன் ஹை ஸ்திரீட்டுக்கு மிக அருகில் உள்ளது ஹாலிடே இன் லண்டன் ஹோட்டல். அதே வட்டாரத்தில்தான் ஹைட் பூங்கா, கென்சிங்டன் அரண்மனை, ராயல் ஆல்பர்ட் மண்டபம் முதலியவையும் அமைந்துள்ளன.  - படம்: சிட்டி டெவலப்மென்ட்ஸ்

சிட்டி டெவலப்மென்ட் லிமிட்டெட்டின் (சிடிஎல்) கிளை நிறுவனமான காப்தார்ன் ஹோட்டல் ஹோல்டிங்ஸ், ‘ஹாலிடே இன் லண்டன்’ ஹோட்டலை 80 மில்லியன் பவுண்டுக்கு (S$480.2 மில்லியன்) வாங்கியுள்ளது.

அந்த ஹோட்டலில் 706 அறைகள் உள்ளன. ஒவ்வோர் அறையும் 396,600 பவுண்டுக்கு விற்கப்பட்டதாகச் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) வெளியிட்ட அறிக்கையில் சிடிஎல் தெரிவித்தது.

கென்சிங்டன் ஹை ஸ்திரீட்டிலிருந்து மிக அருகில் உள்ளது ஹோட்டல். அதே வட்டாரத்தில்தான் ஹைட் பூங்கா, கென்சிங்டன் அரண்மனை, ராயல் ஆல்பர்ட் மண்டபம் முதலியவையும் அமைந்துள்ளன.

ஹோட்டல் 6,356 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. அங்கிருந்து நடந்துசென்றால் 15 நிமிடத்தில் ஒலிம்பியா லண்டனுக்குச் சென்றுவிடலாம்.

இவ்வாண்டில் (2025) செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதத்தில், ஹோட்டலில் உள்ள அறைகளில் 97 விழுக்காட்டில் மக்கள் தங்கியிருந்தனர்.

கடந்த 12 மாதத்தில் மொத்த வருமானம் 39 மில்லியன் பவுண்டைத் தாண்டியதாக அறிக்கை சொன்னது. ஹோட்டலுக்குக் கிடைக்கும் லாபம் 6 விழுக்காட்டுக்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய லண்டனில், காலவரம்பற்ற உரிமை அதிகாரத்தைக் கொண்ட சொத்தை வாங்குவது என்பது வாழ்நாளில் ஒரே ஒருமுறை கிடைக்கக்கூடிய வாய்ப்பு என்றார் சிடிஎல் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் குவெக் லெங் பெங்.

“அத்தகைய சொத்துகள் அந்த வட்டாரத்தில் மிகவும் குறைவு. அதுவும் எங்களின் காப்தார்ன் தாரா ஹோட்டலுக்குப் பக்கத்திலேயே இருப்பது என்பது அரிதினும் அரிது,” என்றார் அவர்.

லண்டனில் கென்சிங்டன், செல்சி வட்டாரங்களில் உள்ள காலவரம்பற்ற உரிமை அதிகாரத்தைக் கொண்ட ஆகப் பெரிய சொத்துகளில் இரண்டு, இப்போது சிடிஎல் குழுமத்தின் வசம் வந்திருக்கிறது.

சிடிஎல்லுக்கு மத்திய லண்டனில் இப்போது 3,000க்கும் மேற்பட்ட ஹோட்டல் அறைகள் சொந்தமாக இருக்கின்றன.

பில்ட்மோர் மேஃபேர், மில்லினியம் குளோஸ்டர் ஹோட்டல் லண்டன், காப்தார்ன் தாரா ஹோட்டல் லண்டன் கென்சிங்டன் முதலியவை அந்நிறுவனத்தின் சொத்துகளுள் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்