மத்திய சேம நிதி சிறப்பு, மெடிசேவ், ஓய்வுக்கால கணக்குகளில் 4% வட்டி 2027 இறுதிவரை நீட்டிப்பு

மத்திய சேம நிதி சிறப்பு, மெடிசேவ், ஓய்வுக்கால கணக்குகளில் 4% வட்டி 2027 இறுதிவரை நீட்டிப்பு

படம்: சாவ்பாவ்

22 Sep 2026 - 1:19 pm

2 mins read

மத்திய சேம நிதியின் சிறப்பு, மெடிசேவ், ஓய்வுக்காலக் கணக்குகளில் உள்ள தொகைக்கான வட்டி விகிதம் 4 விழுக்காடாக 2027ஆம் ஆண்டு இறுதிவரை நீட்டிக்கப்படுகிறது.

நிச்சயமற்ற பொருளியல் சூழலுக்கு மத்தியில் வட்டி விகிதம் நீட்டிக்கப்படும் நிலையில் உறுப்பினர்களின் ஓய்வுக்கால சேமிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் என்று மத்திய சேம நிதிக் கழகமும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) கூட்டறிக்கை வெளியிட்டன.

இவ்வாண்டின் நான்காம் காலாண்டிலும் சிறப்பு, மெடிசேவ், ஓய்வுக்காலக் கணக்குகளில் உள்ள தொகைக்கான 4 விழுக்காட்டு வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது.

சாதாரண கணக்கிற்கான வட்டி விகிதம் இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் 2.5 விழுக்காடாக நீடிக்கும்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டுக் கடன்களுக்கான சலுகை வட்டி விகிதம், மத்திய சேம நிதியின் சாதாரண கணக்கிற்கான வட்டி விகிதத்தைவிட 0.1 விழுக்காடு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, அது நான்காவது காலாண்டில் மாற்றமின்றி 2.6 விழுக்காடாகத் தொடரும்.

ஓய்வுக்கால சேமிப்பை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக மத்திய சேம நிதி உறுப்பினர்கள் தொடர்ந்து கூடுதல் வட்டியைப் பெறுவர்.

55 வயதிற்குட்பட்ட உறுப்பினர்களுக்கு ஒருங்கிணைந்த இருப்பில் உள்ள முதல் S$60,000 தொகைக்குக் கூடுதலாக 1 விழுக்காடு வட்டி வழங்கப்படும். சாதாரண கணக்கிற்கான உச்சவரம்பு S$20,000ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

55 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய உறுப்பினர்களுக்கு ஒருங்கிணைந்த இருப்பில் உள்ள முதல் S$30,000 தொகைக்குக் கூடுதலாக 2 விழுக்காடு வட்டியும் அடுத்த S$30,000 தொகைக்குக் கூடுதலாக 1 விழுக்காடு வட்டியும் வழங்கப்படுகிறது

அத்தகையோருக்கான சாதாரண கணக்கிற்கான உச்சவரம்பு S$20,000ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சாதாரண கணக்கில் உள்ள தொகைக்குக் கிடைக்கும் கூடுதல் வட்டி உறுப்பினர்களின் சிறப்புக் கணக்கு அல்லது ஓய்வுக்கால கணக்கிற்குச் செல்லும்.

குறிப்புச் சொற்கள்
மத்திய சேம நிதிவட்டிநீட்டிப்பு