சிங்கப்பூர், தனியார் சுகாதாரப் பராமரிப்பில் உள்ள நோயாளிகள் பொதுத் துறைக்கு மாறிவரும் வேகத்தைக் குறைக்க அரசாங்கம் முற்பட்டுள்ளது. அதிகரித்துவரும் சந்தாக்கள் காரணமாக ஒருங்கிணைந்த ஷீல்ட் திட்டம் வைத்திருக்கும் பலர் ரைடர் அம்சத்தைக் கைவிடுகின்றனர்.
எனவேதான் சுகாதார அமைச்சு அண்மையில் கொள்கை மாற்றம் ஒன்றை அறிமுகம் செய்தது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து புதிய ரைடர் அம்சங்கள் காப்புறுதித் திட்டத்தில் விற்கப்படாது.
பொதுச் சுகாதாரப் பராமரிப்பு வளங்கள், காத்திருக்கும் நேரம் ஆகியவற்றின்மீது புதிய மாற்றம் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்த பொதுமக்களின் கேள்விக்குச் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் பதிலளித்தார்.
“தனியார் சுகாதாரப் பராமரிப்புச் சந்தாக்கள் மேலும் உயர்வதைத் தணிக்க புதிய கொள்கையை அறிமுகம் செய்துள்ளோம். அது கட்டுப்படியான ரைடர் திட்டத்தை வாங்க மக்களை உந்தும் என்று நம்புகிறோம்,” என்றார் திரு ஓங்.
சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் 100,000 பேர் காப்புறுதி ரைடர் அம்சத்தைக் கைவிடுகின்றனர் அல்லது குறைத்துக்கொள்கின்றனர் என்றார் அவர்.
புக்கிட் கேன்பரா நீச்சல் வளாகத்தில் நடைபெற்ற நீர் விளையாட்டு கேளிக்கை நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் திரு ஓங் பேசினார்.
கொள்கை மாற்றத்தின் மூலம் புதிய ரைடர் அம்சங்களுக்கான சந்தாக்கள் ஏற்கெனவே அந்த அம்சத்தை வாங்கியோர் செலுத்தும் சந்தாவைவிட 30 விழுக்காடு குறைவாக இருக்கும் என்று திரு ஓங் விளக்கமளித்தார்.
“சந்தாக்கள் 30 விழுக்காடு குறைந்தாலும் மக்கள் ரைடர் அம்சத்தைக் கைவிடாமல் தொடர்ந்து தனியார் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் இருப்பர்,” என்றார் திரு ஓங்.
தொடர்புடைய செய்திகள்
கொலோனோஸ்கோபி எனும் பெருங்குடல் பரிசோதனை போன்ற சில சோதனைகள் பொதுச் சுகாதாரப் பராமரிப்புக்கு மாறக்கூடும் என்ற திரு ஓங், புதிய சந்தாதாரர்களைத்தான் கொள்கை மாற்றம் பாதிக்கும் என்பதால் பெரிய அளவில் தாக்கம் இருக்காது என்று நம்புவதாகக் கூறினார்.
சுகாதார அமைச்சு நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்.
“அமைச்சு மேற்கொள்ளும் இந்த முயற்சி நீண்டகாலத்துக்கானது. தனியார் துறையிலிருந்து பெருந்திரளான நோயாளிகள் திடீரென பொதுச் சுகாதாரப் பராமரிப்புக்கு மாறுவதைத் தவிர்க்க முடியும்,” என்றார் திரு ஓங்.
அரசாங்கம், பொதுச் சுகாதாரப் பராமரிப்பை தொடர்ந்து விரிவுபடுத்துகிறது என்ற அவர், கூடுதல் மருத்துவமனைகள் கட்டப்படுவதுடன் தாதிகளின் எண்ணிக்கையும் உயர்த்தப்படும் என்றார்.


