கடைகளில் திருடிய நிலை மாறி மோசடி வழக்குகளில் கைதாகும் இளம்பெண்கள்

சிங்கப்பூர் இளையர் குற்றப்போக்கில் உருவெடுக்கும் மாற்றம்

கடைகளில் திருடிய நிலை மாறி மோசடி வழக்குகளில் கைதாகும் இளம்பெண்கள்

கோப்புப் படம்: ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ்

29 Sep 2026 - 6:01 pm

2 mins read

சிங்கப்பூரில் இளையர் புரியும் குற்றச்செயல்கள், மறுவாழ்வு நடவடிக்கைகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் கொண்ட  தகவல்கள் வெளியீடு கண்டுள்ளன.

சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சு, செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) வெளியிட்ட 2026ஆம் ஆண்டிற்கான ‘இளையர் மறுவாழ்வு ஆதரவின் போக்குகள் அறிக்கை’யின்படி,  இளம்பெண்கள் புரியும் குற்றச்செயல்களின் பிரிவுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதோடு, இளையர்களின் மறுவாழ்வுத் திட்டங்களின் சேர்க்கையிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

பெண்களின் குற்றப் பட்டியலில் முதலிடம் பிடித்த ‘மோசடிகள்’

இதுவரை இளம்பெண்களிடையே அதிகம் பதிவான குற்றப் பிரிவாக ‘கடைத் திருட்டுகள்’ இருந்து வந்தது. ஆனால், 2025ஆம் ஆண்டில் நிலைமை மாறியுள்ளது. 

முதன்முறையாக, கடைத் திருட்டுகளைப் பின்னுக்குத் தள்ளி ‘ஏமாற்று வேலைகள், நிதி முறைகேடுகள்’ இளம்பெண்கள் மத்தியில் முதன்மை குற்றப்பிரிவாக உருவெடுத்துள்ளது. 2025ல் மட்டும் 325 இளம்பெண்கள் இத்தகைய மோசடி வழக்குகளில் சிக்கியுள்ளனர். 

ஆண்களைப் பொறுத்தவரை 2023ஆம் ஆண்டிலிருந்தே மோசடி வழக்குகள் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகின்றன. 2025ல் இதில் 740 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இளையர்கள் குறிப்பாகத் தங்களின் வங்கிச் கணக்கு விவரங்கள், சிங்பாஸ்  கடவுச்சொற்கள், கைப்பேசி சிம் கார்டுகளைப் பணத்திற்காக மோசடிக் கும்பலிடம் வழங்கி, ‘மோசடித் தரகர்களாக’ மாறுவதும் அனைத்துலக அளவில் கவலையளிக்கும் விவகாரமாக உருவெடுத்துள்ளது.  

இத்தகையச் சம்பவங்களில் சிக்கும் குறைந்தபட்ச அபாயம் கொண்ட இளையர்களுக்கான மாற்றுப்பாதை சார்ந்த நிலை 1 திட்டங்களில் சேர்க்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2024ல் 233 ஆக இருந்து, பிறகு 2025ல் 495 ஆக இருமடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 

குறிப்பாக, ‘இளையர் மேம்படுத்தப்பட்ட கண்காணிப்புத் திட்டத்தில்’ சேர்க்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 36லிருந்து 130 ஆக அதிகரித்துள்ளது.

2025ஆம் ஆண்டு முதல் ‘எட்டோமிடேட்’  எனும் போதைப்பொருளைப் பயன்படுத்திய இளையர்களை, அரசாங்கம் இத்திட்டத்தின் கீழ் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தத் தொடங்கியதே இந்த உயர்வுக்கு முக்கியக் காரணமாக அறியப்படுகிறது.   

அதேவேளை, மறுவாழ்வு திட்டங்களில் நல்ல முன்னேற்றமும் காணப்படுகிறது எனவும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. 

இளையர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் அறிக்கையின், மறுவாழ்வு சேர்க்கைப் புள்ளிவிவரங்களில் பிரதிபலிக்கின்றன.   

நன்னடத்தை கண்காணிப்பு, சமூக மறுவாழ்வு மையங்களில் வைக்கப்பட்ட பெரும்பாலான இளையர்கள், தங்கள் தண்டனைக்காலம் முடிந்த இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டும் குற்றம் புரியவில்லை என்றும் அறிக்கை விவரித்தது.

குறிப்புச் சொற்கள்
மோசடிபெண்கள்ஆண்இளையர்குற்றச்செயல்சிங்கப்பூர்