பெற்றோரின் துன்புறுத்தலால் எட்டு மாதக் குழந்தையான டிரெவர் நியோ உயிரிழப்பதற்குமுன், பெற்றோரின் துன்புறுத்தல் தொடர்பான கவலைகள் குறித்துச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பாதுகாப்புச் சேவைக்கோ பிற சமூகச் சேவை அமைப்புகளுக்கோ பரிந்துரைக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
பால் குடிக்காததுடன் வாந்தி எடுத்ததாலும் தாயாரால் உலுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலும் 2024 ஜனவரி 18 முதல் 23ஆம் தேதி வரை, கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் அக்குழந்தை சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தது.
வீடு திரும்பியபின் மருத்துவமனையின் பராமரிப்புத் திட்டத்தைப் பின்பற்றுவதாகக் குழந்தையின் பெற்றோர் ஒப்புக்கொண்டிருந்தனர்.
மருத்துவமனையின் மருத்துவ வாரியத் தலைவர் ஐலின் லியூ, குழந்தையின் பெற்றோருக்குப் பிள்ளை வளர்ப்பு, குழந்தை வளர்ச்சி ஆதரவுச் சேவைகளை வழங்கியதாகத் தெரிவித்தார். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் புதன்கிழமை (அக்டோபர் 21) பதிலளித்த அவர், வேறு விதமான கவலைகள் ஏதுமில்லாததால் வழக்கு நிறைவுபெற்றதாகக் கூறினார். ஆனால், பராமரிப்புத் திட்டத்தின் விவரங்களையோ கண்காணிப்புக் காலத்தையோ அவர் குறிப்பிடவில்லை.
புதன்கிழமை டிரெவர் நியோவின் பெற்றோருக்குத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து மருத்துவமனையும் அமைச்சும் விளக்கம் அளித்தன.
தந்தை நியோ ஜியா மிங்கிற்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தாய் குளோயி கான் சி சுவானிற்கு 15 ஆண்டுகள் 3 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
டிரெவர் தனது குறுகிய வாழ்நாளின் பெரும்பகுதி பெற்றோரால் அடிக்கப்பட்டும் உலுக்கப்பட்டும் துன்புறுத்தலுக்கு ஆளானது நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது. 2024 செப்டம்பரில் குழந்தையின் அழுகையை நிறுத்த, அதன் முகத்திலும் மூக்கிலும் தாக்கிய தாய், பிள்ளையை மெத்தையில் கவிழ்த்துப் போட்டதில் அது உயிரிழந்தது.
டிரெவரின் வழக்கு குறித்துத் தனிப்பட்ட குழு ஆய்வு மேற்கொண்டதாகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது. டிரெவர் மாண்ட சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, குழந்தைப் பாதுகாப்புக் கட்டமைப்பை மேம்படுத்துவதே அதன் நோக்கம்.
கைக்குழந்தைகள், சிறுகுழந்தைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தொழில்முறை வல்லுநர்கள் கண்டறிந்து, துறைகளுக்கிடையே ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்பட்டது.
