சிங்கப்பூரில் உள்ள சீன குலவழிச் சங்கங்கள் தங்களது பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளுக்குக் கூடுதல் நிதியைப் பெற உள்ளன.
சீனக் கலாசாரத்தை வளர்ப்பதற்கான நிதி ஆதரவு விரிவாக்கப்படுவதன் ஒரு பகுதியாக அந்தக் கூடுதல் நிதி அவற்றுக்குக் கிடைக்கும்.
அதுபோன்ற அமைப்புகளின் ஒட்டுமொத்த அமைப்பான சிங்கப்பூர் சீனக் குலவழிச் சங்கங்களின் கூட்டமைப்பு (SFCCA), கலாசார நடவடிக்கை நிதி கேட்டு வரும் விண்ணப்பங்களுக்கு ஒதுக்கப்படும் அதிகபட்ச நிதியை $2,000லிருந்து $7,500 ஆக அதிகரித்து உள்ளது.
பிற அமைப்புகளுடன் சேர்ந்து கலாசார நிகழ்ச்சிகளை நடத்தும் குலவழிச் சங்கங்கள் கூடுதல் நிதியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதேநேரம், குலவழிச் சங்கங்கள் தனியாக நடத்தும் நிகழ்ச்சிகளுக்கான அதிகபட்ச நிதி உதவி $2,000லிருந்து $5,000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
SFCCA கூட்டமைப்பில் தற்போது 250 சங்கங்கள் இடம்பெற்று உள்ளன. அவற்றில் 20 அமைப்புகள் இணை உறுப்பியமாக இடம்பெற்று உள்ளன. அதாவது, அந்த 20 அமைப்புகளும் குலவழிச் சங்கங்களாக அல்லாமல் கலை, கலாசாரக் குழுக்கள் போன்ற சீன சமூக அமைப்புகளாக உள்ளன.

