பிப்ரவரி 27, 28ல் சிங்கே அணிவகுப்பு

2 mins read
be8330d1-b15f-4644-95eb-ab878d16d516
சிங்கே அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள உள்ளூர் புல்லாங்குழல் இசைக் கலைஞர் முனைவர் கானவிநோதன் ரத்தினம், வயலின் இசைக் கலைஞர் டிராவிஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கே அணிவகுப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27, 28ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அணிவகுப்பில் 3,000க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்பர்.

இதுவே சிங்கே அணிவகுப்பின் வரலாற்றில் ஆகப் பெரிய சமூக ஒருங்கிணைப்பாக இருக்கும் என்று வியாழக்கிழமையன்று (டிசம்பர் 4) மக்கள் கழகம் தெரிவித்தது.

54வது முறையாக நடத்தப்படும் சிங்கே அணிவகுப்பில், நாட்டின் பல கலாசார, மரபுடைமை அம்சத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதே சமயம் பாரம்பரியத்துடன் நவீனப் புத்தாக்கமும் ஒருங்கிணைக்கப்படும்.

சிங்கே அணிவகுப்பில் 2026ல் ஐந்து பெரிய மிதவைகள் காட்சிப்படுத்தப்படும்.

சிங்கப்பூரின் ஐந்து வட்டாரங்களைச் (மத்திய, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்[Ϟ]மேற்கு) சேர்ந்த 5,000 குடியிருப்பாளர்களுடன் இந்த மிதவைகள் தொடர்புடையவை.

அடுத்த ஆண்டுக்கான மிதவைகள் ஏழு மீட்டர் உயரத்தில் இருக்கும் என்று மக்கள் கழகம் கூறியது.

கடந்த சில ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்ட மூன்று மீட்டர் நீளமுள்ள சிறு மிதவைகளைவிட அடுத்த ஆண்டுக்கான மிதவைகள் பெரிதாக இருக்கும்.

மிதவைகளை உள்ளூர் ஓவியர்களும் குடியிருப்பாளர்களும் இணைந்து உருவாக்கினர்.

அவை மின்சார விசைகளால் இயக்கப்படும் என்று மக்கள் கழகம் தெரிவித்தது.

சிங்கே அணிவகுப்பின் வரலாற்றில் முதல்முறையாகப் பார்வையாளர்கள் மோதிர வடிவிலான அரங்கில் அமர்ந்திருப்பர். வட்ட வடிவில், பல மாடிகளைக் கொண்ட மேடையைச் சுற்றி பார்வையாளர்கள் அமர்ந்திருப்பார்கள் என்று மக்கள் கழகம் கூறியது.

தேசிய தினம் உள்ளிட்டப் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் புல்லாங்குழல் வாசித்துள்ள உள்ளூர் இசைக் கலைஞர் முனைவர் கானவிநோதன் ரத்தினம் முதன்முதலாக சிங்கே அணிவகுப்பில் வாசிக்கவுள்ளார்.

இதனால் தாம் அடையும் மகிழ்ச்சியைச் செய்தியாளர்களிடம் வெளிப்படுத்திய கானவினோதன், பல்வேறு கலாசார இசைக்கூறுகள் கொண்டுள்ள பாடல் ஒன்றில் வட இந்தியக் குழல் வழி இந்திய இசையைச் சேர்க்கவிருப்பதாகக் கூறினார்.

“என் இசை விளையாட்டுத்தனமாகவும் சுட்டித்தனமாகவும் இருக்கவேண்டும் எனக் கேட்கப்பட்டிருந்தது. இயன்றவரை செய்துள்ளேன். இது எனக்குப் பிடித்திருந்தது, சுவையாக இருந்தது,” என்று 2024ல் கலாசாரப் பதக்கம் பெற்ற கானவினோதன் கூறினார்.

கூடுதல் செய்தி: கி. ஜனார்த்தனன்
குறிப்புச் சொற்கள்