கழிப்பறைகளின் தூய்மை, சமூகத்தின் சாதனை

4 mins read
நமது கழிப்பறைகள் சுத்தமாக இருந்தால் நாம் அனைவரும் வெற்றி பெறுகிறோம்!
06b5a99f-a52e-49a7-b8c6-c381f3280d51
உணவங்காடி நிலையத்தில் சுத்தமாகக் காணப்படும் பொதுக் கழிவறைகள். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அவசர காலங்களில் தம் குழந்தைக்குப் பாலூட்டவும், அணையாடை மாற்றவும் பாதுகாப்பான சூழல்களை நாடுவார் திருவாட்டி சித்திரா. பொது இடங்களில் பெரும்பாலும் பொது கழிப்பறைகளே அவருக்குத் துணைநின்றன. அவற்றின் தூய்மை உடல், மன ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, பாதுகாப்புக்கும் அவசியம் என்பது அவரின் அனுபவம்.

வேற்று நாட்டிலிருந்து இருபதாண்டு காலத்துக்கு முன் வந்த அவரை வெகுவாக வியக்க வைத்தன சிங்கப்பூரின் பொது கழிப்பறைகள். அவை அடிக்கடி சுத்தம் செய்யப்படுவதும் நேர்த்தியாக பராமரிக்கப்படுவதும் அவரை ஆச்சரியப்படுத்தின. அச்சமயம் கைக்குழந்தையோடு இருந்த அவரின் அச்சங்களைப் போக்கும் வண்ணம் அவை அமைந்தன.

சுத்தமாகக் காணப்படும் பொதுக் கழிவறைகள்.
சுத்தமாகக் காணப்படும் பொதுக் கழிவறைகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“இப்போது குழந்தைகள் முதல் உடற்குறையுள்ளோர், பெரியோர் வரை அனைவரும் எளிதில் பயன்படுத்தக்கூடிய வசதிகள் பெரும்பாலான பொது கழிப்பறைகளில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக, மக்கள் இவ்வசதிகளை மெத்தனப்போக்கோடு அலட்சியப்படுத்தாமல் பொறுப்போடு பயன்படுத்துவதே அவற்றின் சுகாதாரத்துக்கு காரணம்,” என்றார் இல்லத்தரசி திருவாட்டி சித்திரா, 50.

ஒருசில இடங்களில் அசுத்தமான கழிப்பறைகளைத் திருவாட்டி சித்திரா காணாமல் இல்லை. அந்த அனுபவத்தால் மீண்டும் அந்த குறிப்பிட்ட இடத்திற்குப் பயணிப்பதற்கே அவர் சிலசமயம் அசௌகரியப்படுவதுண்டு.

இப்போதெல்லாம், தம்மால் முடிந்த அளவுக்கு பின்னூட்டம் அளிக்கக்கூடிய வழிகளில் அது குறித்த கருத்துக்களைப் பதிவு செய்கிறார்.

அவ்வசதி பேரங்காடிகள் முதலிய பல பொது இடங்களில் வழங்கப்பட்டுள்ளதையும் அவர் பாராட்டினார்.

சுத்தமான பொது கழிப்பறைகள் இயக்கம் மக்களிடத்தில் பொது சுகாதார பொறுப்பை வலுப்படுத்தவும் விழிப்புணர்வைக் கூட்டவும் இடம்பெற்று வருகிறது.

தேசியச் சுற்றுப்புற அமைப்பின் (NEA) முழுமையான சுகாதார உத்தியின் ஓரங்கமான இம்முயற்சி, கழிப்பறை சுகாதார அமலாக்கம், கழிப்பறை வடிவமைப்பு, தொழில்முறை மேம்பாடு ஆகிய பலதரப்பட்ட செயல்பாடுகளுக்கு இடையே முத்தாய்ப்பாக அமைகிறது.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு இவ்வாண்டினை “பொது சுகாதார ஆண்டு’ என அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டுக்கான சுத்தமான பொது கழிப்பறைகள் இயக்கம் புது பொலிவு காண்கிறது. சுகாதாரமற்ற கழிப்பறைகளின் அடிப்படை காரணிகளை கூர்ந்து அறிந்து முறையே களைவதற்கு இவ்வாண்டு பொது கழிப்பறைகள் பணிக்குழு ஒன்றினையும் அமைச்சு உருவாக்கியுள்ளது.

கழிப்பறைகளின் சுகாதாரம் கடந்தாண்டுகளில் மென்மேலும் முன்னேற்றம் அடைந்துள்ளதை கவனித்துள்ளார் தேக்கா சந்தையில் அமைந்துள்ள ஒரு பான விற்பனை கடையில் பணிபுரியும் திரு சிங்காரவேலு, 54.

நான்காண்டுகளாக பணியிலுள்ள அவர், தேக்கா சந்தையின் புதுப்பிப்புக்குப் பிறகு கழிப்பறை வடிவமைப்பும் சுகாதாரமும் இன்னும் மேம்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டார்.

தேக்கா சந்தையின் புதுப்பிக்கப்பட்டு 2023ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.
தேக்கா சந்தையின் புதுப்பிக்கப்பட்டு 2023ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. - படம்: பெரித்தா ஹரியான்

தற்சமயம் குறைந்தது ஆறு முறை சுத்தப்படுத்தப்படும் சந்தையின் கழிப்பறைகள் உச்சக்கட்ட நேரங்களில் இன்னும் அதிகமாக கண்காணிக்கப்படுவது ஒரு நல்ல யோசனையென அவர் கூறினார்.

உணவுக்கடைகளின் அருகாமையில் அமைக்கப்பட்டிருக்கும் காரணத்தால் சந்தையிலுள்ள பொது கழிப்பறைகளின் சுகாதாரம் வாடிக்கையாளர் அனுபவத்தை பாதிக்கக்கூடும்.

துர்நாற்றம், ஈரமான தரை, அழுக்கான கால்சுவடுகள் ஆகியவற்றால் அவர்கள் மீண்டும் சந்தைக்கு வரவே தயங்கலாம். அல்லது, சந்தையில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளலாம்.

இதுகருதி சந்தையில் இயங்கும் உணவு, பானக்கடைகளும் கழிப்பறை சுத்தத்தை தங்களின் பொறுப்பாக உணரும் மனப்பான்மையும் அதிகரித்துள்ளதை திரு சிங்காரவேலு சுட்டினார்.

“துப்புரவாளர்களின் வேலை எளிதல்ல. தொழில்கள் ஒருபுறம் பராமரிப்பை மேம்படுத்திக் கொண்டிருக்க, மறுபுறம் மக்களின் கைகளில்தான் சுகாதாரம் உள்ளது என்பதை எல்லோரும் உணரவேண்டும்,” என்றார் திரு சிங்காரவேலு.

இக்கருத்தின் எதிரொலியாக, “நாம் குப்பை போடாவிட்டாலும் ஆங்காங்கே சில சமயம் திசு தாட்கள் இருக்கக்கூடும். அவற்றை குப்பையில் போட உதவுவது, போன்ற சிறு வழிகளிலும் நம் பங்கை ஆற்றலாம்,” என்றார் திருவாட்டி சித்திரா.

சுத்தமாகக் காணப்படும் சிங்கப்பூரின் பொதுக் கழிவறைகள்.
சுத்தமாகக் காணப்படும் சிங்கப்பூரின் பொதுக் கழிவறைகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எனவே, “க்ளீன்-இட் ஃபார்வர்ட்” - Clean it Forward - அதாவது, பிறருக்காக சுத்தப்படுத்துவது ஒரு சமூகமாக நம் பொது கழிப்பறைகளின் தூய்மைத்தரத்தை உயர்த்துவதில் பங்கு வகிக்கும்.

தனிமனித அளவில், சுத்தப்படுத்து, நீரால் போக்கு, உலர்த்து, குப்பை அகற்று எனும் நான்கு படிகளைக் கொண்ட வழிமுறையை மக்கள் பின்பற்றினாலே பொது கழிப்பறை சுகாதாரத்தை ஏற்ற நிலையில் வைத்துக்கொள்ளலாம்.

  1. தூய்மைப்படுத்துவது: கழிப்பறை இருக்கையில் தவறுதலாக சிந்தப்படும் சிறுநீர், தரையில் அழுக்கான காலடி சுவடுகள் முதலியவற்றை துடைத்துவிடுவது.
  2. நீரால் போக்குவது: நீர்விசையைப் பயன்படுத்தி, கழிப்பறையிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் முழுதாக கழிவுகள் போக்கப்படுவதை உறுதி செய்வது.
  3. உலர்த்துவது: கைகளைக் கழுவிவிட்டு தரையில் நீரை சொட்டவிடாமல், ஈரம் உலர்த்தும் சாதனத்தைப் பயன்படுத்தி கைகளை உலர்த்திக்கொள்வது.
  4. கழிப்பறையின் உள்ளோ வெளியிலோ உள்ள திசு தாட்கள் முதலிய குப்பைகளை முறையாக குப்பைத்தொட்டியில் வீசுவது.

இந்நான்கு வழிமுறைகளைப் பரிந்துரைக்கும் NEA, பொது சுகாதாரத்தில் தனிமனித பங்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

“நமது கழிப்பறைகள் சுத்தமாக இருந்தால் நாம் அனைவரும் வெற்றி பெறுகிறோம்!” என்பதே NEAஇன் இயக்க முழக்கவரி.

“நமது கழிப்பறைகள் சுத்தமாக இருந்தால் நாம் அனைவரும் வெற்றி பெறுகிறோம்!” என்பதே NEAஇன் இயக்க முழக்கவரி. 
“நமது கழிப்பறைகள் சுத்தமாக இருந்தால் நாம் அனைவரும் வெற்றி பெறுகிறோம்!” என்பதே NEAஇன் இயக்க முழக்கவரி.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதற்கேற்ப, எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய நான்கு படி வழிமுறையை அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.

உணவங்காடிகள், சந்தைகளில் உள்ள பொது கழிப்பறைகள் அசுத்தமாக இருக்கும் என்பது ஒரு பரவலான கண்ணோட்டம் என கூறினார் திருவாட்டி சித்திரா.

ஆனால், அவற்றின் பராமரிப்பு தரம் அண்மைய ஆண்டுகளில் கூடியுள்ளது.

இந்நிலையில் அக்கண்ணோட்டம் மாறுவதற்கு, அமைப்புகளையும் துப்புரவாளர்களையும் மட்டும் குறைகூறும் போக்கினை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றார் அவர்.

மாறாக, மக்களுக்கும் வர்த்தகங்களுக்கும் அதில் முக்கிய பொறுப்பு இருப்பதனை அவர் வலியுறுத்தினார்.

தேசியச் சுற்றுப்புற அமைப்புடன் இணைந்து வழங்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்