புத்தாண்டு இரவன்று மரினா பே வட்டாரத்தில் நடக்கும் வாணவேடிக்கையைக் காணப் பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டனர்.
கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) கட்டங்கட்டமாக ஆறு இடங்களைத் தற்காலிகமாக மூடினர்.
அந்த இடங்களை புதன்கிழமை (ஜனவரி 1) காலை முதல் மீண்டும் அதிகாரிகள் திறந்துவிட்டனர்.
செவ்வாய்க்கிழமை இரவு ஜூப்லி பிரிட்ஜ், மெர்லையன் வாட்டர்ஃபிரண்ட், புல்லர்ட்டன் வாட்டர்ஃபிரண்ட், எஸ்பிலனேட் வாட்டர்ஃபிரண்ட், மரினா பே வாட்டர்பிரண்ட், ஹெலிஸ் பிரிட்ஜ் ஆகிய பகுதிகளைச் சிங்கப்பூர் காவல்துறை தற்காலிகமாக மூடியது.
புதன்கிழமை பின்னிரவு 1.30 மணிவாக்கில் மக்கள் கூட்டம் குறையத் தொடங்கியதையடுத்து அப்பகுதிகள் மீண்டும் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.
காவல்துறை எதிர்பார்த்ததுபோல் அதிக எண்ணிக்கையில் மக்கள் வந்திருந்ததாகவும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
போக்குவரத்தைக் கட்டுப்படுத்த மூடப்பட்ட சாலைகளும் பின்னர் திறந்துவிடப்பட்டது.

