சிங்கப்பூர் காப்பிக்கடைகளில் உள்ள பொதுக் கழிவறைகள், 2023ல் இருந்ததைவிட இவ்வாண்டு மேலும் அசுத்தமாக இருந்ததாக சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் (எஸ்எம்யு) அண்மைய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
1,078 காப்பிக்கடைகளில் உள்ள 1,852 கழிவறைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவை கழிவறைச் சுத்தம் குறித்த குறியீட்டில் (100 என்றால் ஆக சுத்தமானது, 0 என்றால் ஆக அசுத்தமானது) சராசரியாக 46.26 புள்ளிகள் பெற்றன. இது, 2023ல் பெற்ற 46.84 புள்ளிகளைவிட சற்றுக் குறைவு.
2016 முதல் 2024 வரை, காப்பிக்கடைக் கழிவறைச் சுத்தத்தில் புள்ளிவிவரப்படி பொதுவாக பேரளவில் மாற்றம் இல்லை என ஆய்வு கண்டறிந்தது.
காப்பிக்கடைகளைவிட உணவங்காடி நிலையக் கழிவறைகள் சுத்தமாக இருந்துள்ளன. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 253 உணவங்காடி நிலையக் கழிவறைகள் சராசரியாக 66.28 புள்ளிகள் பெற்றன. 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் (65.6 புள்ளிகள்) இது சற்று முன்னேற்றம்.
2024 ஜனவரி 1 முதல் நவம்பர் 15 வரை, பொதுக் கழிவறைச் சுத்த விதிமீறல்களால் தேசிய சுற்றுப்புற வாரியமும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் 1,200க்கும் மேற்பட்ட அமலாக்க நடவடிக்கைகளை எடுத்தன.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங், இவ்வாண்டின் ‘சுத்தமான பொதுக் கழிவறைகள்’ இயக்கத்தை நவம்பர் 21ஆம் தேதி தொடங்கி வைத்தார். அவர் வழிநடத்தும் பொதுக் கழிவறைகள் பணிக்குழு, 2025 முதல் காலாண்டில் கழிவறைச் சுத்தம், வடிவமைப்பு குறித்த பரிந்துரைகளை வழங்கும்.
2024 ஜனவரி 1ஆம் தேதி நிலவரப்படி, பொதுக் கழிவறைகள் அசுத்தமாக இருப்பதாக முதன்முறையாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றத்தின் தன்மைக்கு ஏற்றவாறு அதிகபட்சம் $1,000 முதல் $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். இது போதுமான தொகைதான் என்று எஸ்எம்யு ஆய்வில் 70 விழுக்காட்டினர் கூறினர். 20 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், அபராதம் அதிகரிக்கப்பட வேண்டும் எனக் கருதினர்.
எங்கு சுத்தம்? எங்கு அசுத்தம்?
2024ல் ஆக அசுத்தமான உணவங்காடி நிலைய, காப்பிக்கடைக் கழிவறைகள் செம்பவாங், ரோச்சோர், பைனியர் ஆகிய இடங்களில் இருந்தன. பைனியர் கழிவறைகள் 2023லும் பட்டியலில் ஆக அசுத்தமானவையாக இருந்தன.
2024ல் ஆக சுத்தமான கழிவறைகளின் பட்டியலில் முன்னிலை வகிப்பது செந்தோசா, நியூட்டன், டங்ளின். 2016, 2020, 2023 ஆகிய ஆண்டுகளில் முதல் நிலையில் வந்த மரினா சவுத், 2024ல் 22வது நிலைக்குத் தள்ளப்பட்டது.
சமையல் வசதிகள் கழிவறைகளுக்கு அருகே இருக்கும்போது கழிவறைகள் அதிக அசுத்தமாக இருப்பதாகத் தெரியவந்தது. உணவைக் கையாள்வோரும் இக்கழிவறைகளைப் பயன்படுத்துவதால் பொதுச் சுகாதாரத்துக்கு இது பங்கம் விளைவிப்பதாக ஆய்வு கூறியது.
வாடிக்கையாளர்களின் கண்ணோட்டம்
உணவங்காடி நிலையங்கள், காப்பிக்கடைகளில் உள்ள கழிவறைகளைச் சுத்தப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் ‘மொத்தமாகப் பயனற்றவை’ அல்லது ‘ஓரளவுதான் பயனுள்ளவை’ என சிங்கப்பூரர்களில் 92 விழுக்காட்டினர் கருதுவதாகவும் ஆய்வு கூறியது.
மொத்தம் 4,905 பேர் ஆய்வில் பங்கேற்றனர்.
வாடிக்கையாளர்களில் 92.3 விழுக்காட்டினர், உணவங்காடி நிலையங்கள், காப்பிக்கடைக் கழிவறைகளின் சுகாதாரம் “ஓரளவு முதல் முற்றிலுமாக மாற வேண்டும்” எனக் கருதினர். காப்பிக்கடை ஊழியர்களில் 62.9 விழுக்காட்டினர் இதே கருத்தைப் பகிர்ந்தனர்.
கட்டணம் செலுத்தத் தயாரா?
‘சுத்தமான கழிவறைகளுக்காகக் கட்டணம் செலுத்தத் தயாரா?’ என்ற கேள்விக்கு, பொதுக் கழிவறைகள் இலவசமாக இருக்கவேண்டும் எனப் பாதிக்கும் மேற்பட்டோர் பதிலளித்தனர். ஆனால், கழிவறை நிச்சயமாக சுத்தமடையும் என்றால் தாம் கட்டணம் செலுத்தத் தயார் எனக் கிட்டத்தட்ட 49 விழுக்காட்டினர் கூறினர். அவர்களில் பெரும்பாலோர் 10 முதல் 30 காசு வரை செலுத்தத் தயாராக இருந்தனர்.
உச்ச நேரங்களில் அரை மணி நேரத்திற்கு ஒருமுறையும் மற்ற நேரங்களில் ஓரிரு மணி நேரத்திற்கு ஒருமுறையும் கழிவறைகளைச் சுத்தப்படுத்த காப்பிக்கடை நடத்துநர்களிடம் 2024 ஜனவரியில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு அறிவுறுத்தியிருந்தது. ஆனால், இந்த அறிவுரைக்குக் காப்பிக்கடை நடத்துநர்கள் இணங்குவதில்லை என 78.2 விழுக்காட்டினர் கருதினர்.
கூடுதல் விவரங்களுக்கு https://www.screeningstatistics.com/toilet/ இணையப்பக்கத்தை நாடலாம்.

