மோசமான நிலையில் காப்பிக்கடை கழிவறைகள்: ஆய்வில் தகவல்

2 mins read
8ce3db39-476c-4d1a-a974-a8ab9efa02ac
2016ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டின் ஆய்விலும் காப்பிக்கடை கழிவறைகள் மோசமான தரநிலையைப் பெற்று வந்துள்ளன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காப்பிக்கடைகளின் கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்க மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் விதிமீறலுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்பட்டாலும் கடந்த சில ஆண்டுகளாக நிலைமையில் முன்னேற்றம் இல்லை.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் (SMU- எஸ்எம்யு) கடந்த ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் அந்த விவரம் தெரிய வந்தது.

2024 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பல்கலைக்கழகத்தின் 222 இளநிலை பட்டதாரி மாணவர்கள் அந்த ஆய்வை நடத்தினர்.

சிங்கப்பூர் முழுவதும் உள்ள 1,428 காப்பிக்கடைகள், உணவங்காடி நிலையங்கள், எம்ஆர்டி நிலையங்கள், கடைத்தொகுதிகள் ஆகியவற்றில் உள்ள 2,602 பொதுக் கழிவறைகளின் நிலை குறித்து அவர்கள் கருத்துகளைத் திரட்டினர்.

17 தகுதிநிலைகள் மூலம் கழிவறைகளின் நிலையை ஆய்வு தீர்மானித்தது. கழிவறைத் தொட்டி (toilet bowl), கைகழுவும் இடம், சோப்பு மற்றும் மெல்லிழைத் தாள்களின் இருப்பு ஆகியன அந்த தகுதிநிலைகளுள் அடங்கும்.

அவற்றில் 14 அம்சங்கள் எதிர்பார்த்த தரத்திற்கும் கீழேயே இருந்ததை ஆய்வு கண்டறிந்தது.

நீர் வெளியேறாமல் அடைத்துக்கொண்ட கை கழுவும் கோப்பை, கறைபடிந்த கழிவறைத் தொட்டி, போதுமான காற்றோட்டம் போன்றவை பெரும்பாலான கழிவறைகளில் காணப்பட்டன.

“கழிவறைகளைச் சுத்தம் செய்வதற்கான அட்டவணை பல இடங்களில் காலாவதியாகி இருந்தது. சில கழிவறைகளில் அதுபோன்ற அட்டவணை காணப்படவில்லை. தண்ணீர்க் குழாய்கள், கைகழுவும் கோப்பை, சோப்பு போன்றவை மட்டும் நியாயமான தரநிலைகளைப் பெற்றன,” என்று எஸ்எம்யு தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

ஒட்டுமொத்தமாக, கடைத்தொகுதிகளில் உள்ள கழிவறைகள் மட்டும் சிறந்த தகுதிநிலையைப் பெற்றிருந்தன. அவை 100க்கு 77.01 புள்ளிகளைப் பெற்றிருந்தன.

அதற்கு அடுத்தபடியாக, உணவங்காடி நிலையங்களின் கழிவறைகள் 66.28 புள்ளிகளைப் பெற்ற நிலையில், காப்பிக் கடைகளின் கழிவறைகள் மட்டும் மோசமான நிலையில் இருந்தன. அவற்றுக்குக் கிடைத்த புள்ளிகள் 46.26.

இதுபோன்ற ஆய்வை எஸ்எம்யு கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. அப்போதிலிருந்து காப்பிக்கடைகளின் கழிவறைகள் மோசமான புள்ளிகளைப் பெற்று வந்துள்ளன.

கழிவறை சுத்தம் தொடர்பாக 4,905 பேரிடம் கருத்துகள் திரட்டப்பட்டன. அவர்களில் 510 பேர் ஊழியர்கள், எஞ்சிய 4,395 பேர் வாடிக்கையாளர்கள்.

கழிவறைகள் சுத்தமாக இருக்க கட்டணம்கூட செலுத்தத் தயார் என்று அவர்களில் பாதிப்பேர் தெரிவித்தனர்.

காப்பிக்கடைகளிலும் உணவங்காடி நிலையங்களிலும் கழிவறைகளை பொறுப்பற்ற முறையில் பயன்படுத்துவதே அவை அசுத்தமடைவதற்குக் காரணம் என 42 விழுக்காட்டினர் கூறினர்.

இருப்பினும், அவற்றின் தூய்மையை உறுதிசெய்ய வேண்டிய கடமை, கடை நடத்துவோருக்கு உண்டு என எஸ்எம்யு புள்ளிவிவரத் துறை தலைமை விரிவுரையாளர் ரோஸி சிங் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்