கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம், 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஓட்டுநரில்லா இடைவழி வாகனச் சேவையை வழங்கவுள்ளது.
முதற்கட்டமாக, பொங்கோல் வட்டாரத்தில் அந்தச் சேவை வழங்கப்படும். கம்ஃபர்ட்டெல்குரோவின் ஸிக் (Zig) செயலிமூலம் முன்பதிவுகளை மேற்கொண்டு வாகனச் சேவையைப் பயனீட்டாளர்கள் மேற்கொள்ளலாம்.
வடக்கு-கிழக்கு பொங்கோலில் கிட்டத்தட்ட 12 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனச் சேவை இருக்கும். ஏழு நிறுத்தங்களில் அவை நிற்கும். அந்த வாகனத்தில் ஐந்து பேர் பயணம் மேற்கொள்ளலாம்.
அண்மையில் நிலப் போக்குவரத்து ஆணையம், போக்குவரத்து நிறுவனங்கள் தங்களது ஓட்டுநரில்லா வாகனங்களைச் சாலையில் சோதிக்க அனுமதி வழங்கியது. அதையடுத்து தற்போது கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போக்குவரத்து நிறுவனங்களின் ஓட்டுநரில்லா வாகனங்கள் முதலில் பூன் லேயில் உள்ள நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு நிலையத்தில் சோதிக்கப்படும்.
அதன் பின்னர்தான் அந்த வாகனங்கள் பொதுமக்கள் பயன்படுத்தப்படும் சாலைகளில் செல்ல அனுமதி வழங்கப்படும்.
ஆய்வு நிலையத்தில் ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் கொண்டு பல்வேறு சோதனைகள் நடத்தப்படும். திடீரென வாகனத்தின் முன் பொருள்கள் வைக்கப்படும். அப்போது வாகனம் என்ன செய்கிறது என்பது கவனிக்கப்படும்.
மேலும், வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுகிறதா, அவசர நேரத்தில் வாகனம் நிறுத்தம் செயல்படுகிறதா உள்ளிட்டவையும் ஆய்வு நிலையத்தில் சோதிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
“நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு நிலையத்தில் வெற்றிகரமாக ஓட்டுநர் இல்லாத வாகனங்களைச் சோதித்தோம். எங்களது புத்தாக்கம், பாதுகாப்பு, செயல்பாடு ஆகியவற்றுக்குக் கிடைத்த வெற்றியாக இதைப் பார்க்கிறோம்,” என்று கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி செங் சியாக் கியான் வியாழக்கிழமை (டிசம்பர் 11) தெரிவித்தார்.
பொங்கோலில் ஓட்டுநரில்லா வாகனங்களுக்கு என ஒதுக்கப்பட்ட மூன்று பாதைகளில் ஒரு பாதையை கம்ஃபர்ட்டெல்குரோவின் வாகனங்கள் பயன்படுத்தும்.
கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனத்தின் ஓட்டுநரில்லா வாகனங்களைச் சீனாவின் போனி.ஏஐ (Pony.ai) தயாரித்துள்ளது. சீனாவின் பல நகரங்களில் ‘போனி.ஏஐ’யின் ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் சேவையில் உள்ளன.

