விற்காத, வீசப்படவிருக்கும் காய்கறிகளையும் பழங்களையும் பெற்று அவற்றைத் தேவையானவர்களுக்கு விநியோகம் செய்துவரும் அமைப்பான ‘ஃபிரிட்ஜ் ரீஸ்டாக் கம்யூனிட்டி’ தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகளில் புதியதொரு மைல்கல்லை எட்டியுள்ளது.
இதுவரை 1.6 மில்லியன் கிலோவுக்கும் அதிகமான உணவுப் பொருள்கள் விரயமாவதிலிருந்து இந்த அமைப்பு பாதுகாத்துள்ளது.
விளைபொருள்களைப் பெற்றுக்கொள்ளும் தனது 500வது நடவடிக்கையைக் குறிக்கும் விதமாக, பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை நிலையத்தில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) தன் தொண்டூழியர்களுடன் சேர்ந்து கொண்டாட்ட நிகழ்வை இது நடத்தியது.
2020ல் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, 75 கனரக வாகனங்களில் ஏற்றிச் செல்லக்கூடிய அளவிலான விளைபொருள்களை வீணாக்கப்படுவதிலிருந்து இந்த அமைப்பு பாதுகாத்துள்ளதாக இதன் நிறுவனர் டேனியல் யாப், 48, தெரிவித்தார். இவற்றை சிங்கப்பூர் முழுவதும் உள்ள பல இடங்களில் விநியோகம் செய்ய இந்த அமைப்பு முற்படுகிறது.
பொதுவாக வீசப்படும் விளைபொருள்களில் உருளைக்கிழங்கு, பயிற்றங்காய், அன்னாசி, ஆரஞ்சுப் பழம், தக்காளி, தர்ப்பூசணி உள்ளிட்டவை அடங்கும். இவற்றில் கரும்புள்ளிகளும் வேர்ப்பகுதி கருமையாகவும் இருப்பதால் இவை வீசப்படுகின்றன.
சமூக நிலையங்களாலும் குடியிருப்பாளர் கட்டமைப்புகளாலும் அமைக்கப்பட்ட 44 விநியோக இடங்களுக்கு ‘ஃபிரிட்ஜ் ரீஸ்டாக் கம்யூனிட்டி’ தற்போது ஆதரவளித்து வருவதாகத் திரு யாப் சொன்னார்.
இவற்றில் ஆகப்பெரிய விநியோக இடம், பீஷான் சமூக நிலையத்தில் உள்ளது. ஒவ்வொரு முறையும் அங்கு விநியோகிக்கப்படும் பழங்களும் காய்கறிகளும் 500 குடும்பங்களைச் சென்றடைவதாக திரு யாப் கூறினார்.
ஐம்பதுக்கும் மேற்பட்ட தொண்டூழியர்களைக் கொண்டுள்ள இந்த அமைப்பால் பெற்றுக்கொள்ளப்படும் விளைபொருள்கள், மாதந்தோறும் ஏறக்குறைய 6,700 குறைந்த வருமானக் குடும்பங்களைச் சென்றடைகின்றன.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், தமது அமைப்பின் நற்பணி தொடரும் என உறுதியளிக்கும் திரு யாப், ஆண்டிறுதிக்குள் இன்னும் கூடுதலான குடும்பங்களுக்கு உதவ இலக்கு கொண்டுள்ளார்.

