தெங்கா, அங் மோ கியோவில் சமூக, சுகாதார ஆதரவு மையங்கள்

தெங்கா, அங் மோ கியோவில் சமூக, சுகாதார ஆதரவு மையங்கள்

1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

10 Oct 2026 - 8:37 pm

2 mins read

தெங்கா வட்டாரவாசிகளுக்குச் சுகாதார, சமூக ஆதரவுச் சேவைகள் எளிதில் கிடைக்கும் வகையில், அப்பகுதியின் முதல் குடும்ப சேவை மையமும் துடிப்புடன் மூப்படைதல் மையமும் அமைக்கப்படவுள்ளன.

தெங்கா கார்டன் அவென்யூ, புளோக் 225A-ல் அமையவுள்ள குடும்ப சேவை மையத்தைத் தைய் ஹுவா குவான் அறநிறுவனம் 2027ஆம் ஆண்டின் மத்தியில் திறக்கத் திட்டமிட்டுள்ளது. அது மனநல ஆலோசனைகளையும் சமூக ஆதரவுச் சேவைகளையும் வழங்கும்.

தெங்கா டிரைவ், புளோக் 121C-ல் மூத்தோருக்கான துடிப்புடன் மூப்படைதல் மையம் அமையவுள்ளது. தெங்காவில் இச்சேவைகள் கிடைப்பதால், குடியிருப்பாளர்கள் வேறு வட்டாரங்களுக்குச் செல்ல வேண்டிய தேவை குறையும் என்று தெங்கா தொகுதி அலுவலகம் சனிக்கிழமை (அக்டோபர் 10) தெரிவித்தது.

தெங்கா வட்டாரத்துக்குப் பொறுப்பு வகிக்கும் சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சூ பெய் லிங், தெங்கா சமூக மன்றத்தில் சனிக்கிழமை நடந்த சுகாதாரக் கொண்டாட்ட நிகழ்வில் இத்தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

டிசம்பர் 2025 நிலவரப்படி, தெங்காவில் 14,000க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு 12,000க்கும் அதிகமான குடும்பங்கள் சாவிகளைப் பெற்றுள்ளன.

அங் மோ கியோவில் புதிய சுகாதார மையம்

அங் மோ கியோ சிறப்பு மருத்துவ மையத்தில் அமைந்துள்ள புதிய ‘என்எச்ஜி ஹெல்த்’ மையம், தேர்ந்தெடுக்கப்பட்ட நோய்த் தடுப்புப் பராமரிப்புப் பரிசோதனைகளையும் தொடர் மருத்துவச் சேவைகளையும் வழங்குகிறது.
அங் மோ கியோ சிறப்பு மருத்துவ மையத்தில் அமைந்துள்ள புதிய ‘என்எச்ஜி ஹெல்த்’ மையம், தேர்ந்தெடுக்கப்பட்ட நோய்த் தடுப்புப் பராமரிப்புப் பரிசோதனைகளையும் தொடர் மருத்துவச் சேவைகளையும் வழங்குகிறது. - படம்: தேசியச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் 
அங் மோ கியோவில் அமைந்துள்ள  சிறப்பு மருத்துவ மையத்தில் பெருங்குடல் புற்றுநோய்ப் பரிசோதனை, மார்பகச் சுகாதாரப் பரிசோதனை, கேட்கும் திறன் பரிசோதனை ஆகியவற்றைப் பெறலாம்.
அங் மோ கியோவில் அமைந்துள்ள  சிறப்பு மருத்துவ மையத்தில் பெருங்குடல் புற்றுநோய்ப் பரிசோதனை, மார்பகச் சுகாதாரப் பரிசோதனை, கேட்கும் திறன் பரிசோதனை ஆகியவற்றைப் பெறலாம். - படம்: தேசியச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் 

மற்றொரு நிகழ்வாக, தேசியச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் (NHG Health) சனிக்கிழமை அங் மோ கியோ சிறப்பு மருத்துவ மையத்தில் புதிய நோய்த்தடுப்புச் சுகாதார மையத்தைத் திறந்துள்ளது.

அங்கு பெருங்குடல் புற்றுநோய் பரிசோதனை, மார்பகச் சுகாதாரப் பரிசோதனை, கேட்கும் திறன் பரிசோதனை, தடுப்பூசிச் சேவைகளைப் பொதுமக்கள் பெறலாம்.

மார்பகப் புற்றுநோயிலிருந்து குணமடைந்து வரும் நோயாளிகள், மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் அந்த மையத்திலேயே தொடர் சிகிச்சைகளைப் பெற முடியும்.

இப்புதிய மையம் முதியோர் மற்றும் நோயாளிகளின் மருத்துவமனைப் பயண நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்று அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தற்காலிக மனிதவள அமைச்சருமான ஜாஸ்மின் லாவ் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டில் மட்டும் அங் மோ கியோவில் 56,000க்கும் மேற்பட்டோர் இக்குழுமத்தின் சுகாதார நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளனர். கிட்டத்தட்ட 400 முதியவர்கள் பரிசோதனைகளைச் செய்துள்ளனர் என்றார் அவர்.

குடும்ப மருத்துவ வரலாற்றோடு தொடர்புடைய மார்பகப் புற்றுநோய், நீரிழிவு நோய் போன்ற சாத்தியமான சுகாதார ஆபத்துகளைக் கண்டறிய, அங் மோ கியோ வாசிகளிடையே தேசியச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமம், குடும்ப உடல்நலம் குறித்த கருத்தறியும் நடவடிக்கையை சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர் புற்றுநோய் சங்கம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் லீ கொங் சியான் மருத்துவப் பள்ளியுடன் இணைந்து உருவாக்கப்பட்ட அந்த ஆய்வு, நாடு முழுவதும் விரிவாக அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர், மேலும் மேம்படுத்தப்படும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்தெங்காஅங் மோ கியோசுகாதாரம்சமூகம்சாங்கி விமான நிலையம்