வகுப்பறையில் ஆசிரியர்கள் தாய்மொழி கற்பிப்பதற்கு அப்பாற்பட்டு சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் போன்ற சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து தாய்மொழி கற்றலை ஊக்குவிக்க தொடர்ந்து கடப்பாடு கொள்ள வேண்டும் என்று கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் கூறியுள்ளார்.
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் ஆசிரியர் தின விருந்து நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அவர், பாடங்களையும் தாண்டி விழுமியங்கள், கலாசாரம், மரபு, வரலாறு ஆகிய முக்கியக் கூறுகளைக் கற்பிக்கும் ஆசிரியர் பணி சவால்மிக்கது என்றார்.
தாய்மொழியே நம் மரபைப் பாதுகாக்கும் மொழி என்று கூறிய திருவாட்டி கான், சிங்கப்பூர் தமிழாசிரியர்கள் தொடர்ந்து அவர்களின் திறன்களை மேம்படுத்தி மாணவர்களுக்கு மகிழ்வூட்டும் வகுப்பறை அனுபவம் அளிப்பதைப் பாராட்டினார்.
உலகத் தமிழாசிரியர் மாநாடு போன்ற நிகழ்வுகளை வழிநடத்தும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தைப் பற்றி பேசிய அவர், சிறிய சமுதாயமாக இருந்தாலும் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளில் அது கலந்துகொள்வது பாராட்டத்தக்கது என்றார்.
சிண்டா, லிஷா, தமிழர் பேரவை, சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபை ஆகிய அமைப்புகள் தமிழாசிரியர் தங்களை மேம்படுத்திக்கொள்ள உகந்த தளங்களாக இருப்பதையும் திருவாட்டி கான் தமது உரையில் குறிப்பிட்டார்.
தமிழ்மொழி தொடர்ந்து செழிக்க ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முடிந்த அளவு புத்தாக்க வழிகளில் மொழியார்வத்தைத் தூண்டும் உத்திகளைக் கையாள வேண்டும் என்றும் திருவாட்டி கான் கேட்டுக்கொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) ஃபூ சாவ் அசோசியேஷன் வளாகத்தில், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆசிரியர் தின விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்மொழி, கற்றல் வளர்ச்சிக் குழுத் தலைவருமான விக்ரம் நாயர், தமிழாசிரியர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள், பங்காளிகள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
தமிழ்மொழி வகுப்பறைப் பாடமாக முடங்கிவிடாமல் இருக்க சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் தொடர்ந்து முக்கியப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அதன் தலைவர் தனபால் குமார் கூறினார்.
“வகுப்பறைக்கு அப்பால், தமிழ்மொழி புழங்கப்படும் மொழியாக இருக்க வேண்டும். அதற்குச் சமூக ஆதரவும் ஈடுபாடும் மிகவும் அவசியம்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
சமூக அமைப்புகள் தமிழ்மொழி ஆர்வத்தை அதிகரிக்க ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகள் பலவற்றில் மாணவர்கள் கலந்துகொள்ள ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய விருந்து நிகழ்வில் கலந்துகொண்ட செயிண்ட் பேட்ரிக்ஸ் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் அர்ஜுனன், “ஒவ்வோர் ஆண்டும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும்போது நான் தவறாமல் வந்துவிடுவேன்.
“ஆசிரியர் பணி எளிதன்று. அவ்வகையில், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது ஆசிரியர்களும் தங்களை தளர்த்திக்கொண்டு மற்ற ஆசிரியர்களைச் சந்தித்து மகிழலாம்,” என்றார்.