‘ஃபோர்க்லிஃப்ட்’ஐ ஆபத்தான முறையில் இயக்கியதாகப் புகார்; அமைச்சு ஆய்வு

2 mins read
7b1a14f2-1635-4950-b153-e57997e3c77a
நவம்பர் 21ஆம் தேதி, உபி அவென்யூ 3ல் இருக்கும் பணியிடத்தில் மனிதவள அமைச்சு அதிகாரிகள் திடீரென ஆய்வு நடத்தினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உபியில் இருக்கும் பணியிடம் ஒன்றில் ஊழியர்கள் ‘ஃபோர்க்லிஃப்ட்’ (Forklift) பாரந்தூக்கியை ஆபத்தான முறையில் இயக்கியதாக மனிதவள அமைச்சுக்குத் தகவல் கிடைத்தது.

அதனையடுத்து, எண் 50, உபி அவென்யூ 3ல் இருக்கும் பணியித்தில் அமைச்சு அதிகாரிகள் வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 21) திடீரென ஆய்வு நடத்தினர்.

அவ்விடத்தில் நடக்கும் விதிமீறல் குறித்து காணொளிகள் மூலம் அமைச்சுக்குப் புகார் தெரிவிக்கப்பட்டது.

‘ஃபோர்க்லிஃப்ட்’ பாரந்தூக்கிக்கு அருகே குப்பைகளை அகற்ற பயன்படுத்தப்படும் 2.4 மீட்டர் உயரமுள்ள தொட்டியின்மீது ஊழியர் ஒருவர் ஏறி நின்றுகொண்டிருப்பதைப் பொதுமக்கள் அனுப்பிய காணொளியில் காண முடிந்தது.

அவ்வாறு அவர் தொட்டியின்மீது நின்றால், கீழே விழுந்து காயமடைய நேரிடும்.

மேலும், தேவையற்ற பொருள்களைக் குப்பைத் தொட்டியில் போடுவதற்கு ஊழியர்கள் ‘ஃபோர்க்லிஃப்ட்’ஐ மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மற்றொரு காணொளியில், பாரந்தூக்கியை ஒருவர் ஓட்டிக்கொண்டிருந்தபோதே ஊழியர் ஒருவர் அதன் பின்புறத்தில் ஏறுவதைப் பார்க்கலாம்.

நவம்பர் 21ஆம் தேதி காலை ஆய்வு மேற்கொண்டபோது அதனை பார்வையிட ஊடகங்களை மனிதவள அமைச்சு அழைத்திருந்தது.

ஆய்வின்போது, காணொளியில் கண்ட ஊழியரைப் போன்று சீருடை அணிந்திருந்த ஒருவர் ‘ஃபோர்க்லிஃப்ட்’ பாரந்தூக்கியை ஓட்டுவதை இரு மனிதவள அமைச்சு அதிகாரிகள் கண்டனர்.

அவரைப் பாரந்தூக்கியை நிறுத்திவிட்டு வருமாறு அதிகாரிகள் அழைத்தனர்.

காணொளிகளில் தாங்கள் பார்த்த விதிமீறல்கள் குறித்து அதிகாரிகள் அந்த ஊழியரிடம் கேள்வியெழுப்பினர்.

குப்பையை அகற்ற தானோ, சக ஊழியர்களோ குப்பைத் தொட்டியின் விளிம்பில் ஏறி நிற்கவில்லை என அந்த ஊழியர் அதிகாரிகளிடம் கூறினார்.

அதிகாரிகளில் ஒருவர், தனக்கு வேறுவிதமான கருத்துகள் கிடைத்ததாகச் சொன்னார்.

தங்களைக் கிடங்கிற்கு அழைத்துச் செல்லும்படி ஊழியரிடம் அவர் கேட்டார்.

அங்கு, பணியிடப் பாதுகாப்பு விதிமீறல்கள்தொடர்பிலான வேறு சிலவற்றையும் அதிகாரிகள் கண்டனர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஊழியர்களிடமும் அவர்களது முதலாளிகளிடமும் பணியிடப் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

மேலும், ஊழியர்களுக்குப் பணியிடப் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து முறையாக விளக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்தனர்.

விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்