தெம்பனிஸ் உணவுக் கடைக்காரர்களிடம் $3,000ஐ ஏமாற்றிய மோசடிக்காரர்கள்

2 mins read
31002a3b-454d-443a-84ac-45afd59bf9f0
ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு, உணவு-பானத் துறையில் அத்தகைய நான்கு சம்பவங்கள் பற்றிப் புகார் செய்யப்பட்டதாகக் காவல்துறை சென்ற மாதம் 18ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. அவற்றில் பாதிக்கப்பட்டோர் இழந்த தொகையின் மதிப்பு $42,000. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தெம்பனிசில் உணவுக் கடை வைத்திருக்கும் தம்பதியர் இணைய மோசடிக்கு ஆளானதில் கிட்டத்தட்ட S$3,000ஐ இழந்துள்ளனர். உணவை விநியோகித்து இரண்டு வாரமாகியும் பணம் கணக்கில் வராததை அவர்களின் மகள் கண்டுபிடித்தார்.

அதன் பிறகுதான் அவர்களின் மகள் திருவாட்டி பூஜா, வங்கிக் கணக்கைச் சரிபார்த்தார். ஃபுட்பாண்டா தளத்தின் மூலம் விநியோகம் செய்த உணவுக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்குரிய வங்கிக் கணக்கு விவரங்கள் மாற்றப்பட்டிருப்பதை அவர் கண்டார்.

அக்டோபர் 10ஆம் தேதிக்கும் 14க்கும் இடையில் கிட்டத்தட்ட S$3,000 இன்னொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டிருப்பது முன்பு செய்யப்பட்ட பரிவர்த்தனைகளில் தெரியவந்ததாகத் திருவாட்டி பூஜா கூறினார்.

அக்டோபர் 24ஆம் தேதி அவர் காவல்துறையிடம் புகாரளித்தார். கிராப், ஃபுட்பாண்டா, டெலிவரூ ஆகிய நிறுவனங்களையும் திருவாட்டி பூஜா தொடர்புகொண்டார்.

அவரின் பெற்றோர் இந்திய உணவுக் கடையை நடத்தி வருகின்றனர். ஏழாண்டாக உணவு விநியோகத் தளங்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்கள் மோசடிக்கு இலக்கானது இதுவே முதன்முறை.

“கணிசமான தொகையை இழந்ததற்காகப் பெற்றோர் வருத்தப்பட்டனர். இதற்கு முன்னர் ஏராளமான சவால்களை அவர்கள் சந்தித்துள்ளனர். ஆயினும் அவர்கள் கலங்கிவிடவில்லை,” என்றார் திருவாட்டி பூஜா.

பாதுகாப்புப் பிரச்சினைகளைச் சரிசெய்வதற்காகப் பெற்றோர், ஃபுட்பாண்டா விநியோகத் தளத்தில் உணவு விநியோகச் சேவையைப் பயன்படுத்துவதை ஒரு வாரத்திற்கு நிறுத்திவைத்ததாக அவர் கூறினார். அந்தக் காலத்தில், அவர்கள் $2,500 ஈட்டியிருக்கலாம் என்றும் திருவாட்டி பூஜா சொன்னார்.

காவல்துறை, வியாழக்கிழமை (டிசம்பர் 4) ஏற்பாடு செய்த இணைய நேர்காணலின்வழி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்களிடம் அவர் பேசினார்.

பெற்றோரின் டெலிவரூ கணக்கும் பாதிக்கப்பட்டதாகவும் அதில் $50 இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் சொன்னார்.

பெற்றோர், ஃபுட்பாண்டாவிடமிருந்து இதுவரை $1,300ஐப் பெற்றுள்ளதாகத் திருவாட்டி பூஜா தெரிவித்தார்.

அவரின் வழக்குக் குறித்த விசாரணை தொடர்கிறது.

ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு, உணவு-பானத் துறையில் அத்தகைய நான்கு சம்பவங்கள் பற்றிப் புகார் செய்யப்பட்டதாகக் காவல்துறை சென்ற மாதம் 18ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. அவற்றில் பாதிக்கப்பட்டோர் இழந்த தொகையின் மதிப்பு $42,000.

குறிப்புச் சொற்கள்