விலங்குநல அமைப்புகளின் சவால்கள் குறித்துப் பரிசீலனை: அமைச்சர் சண்முகம்

3 mins read
4259ee0b-895a-4d94-b1fe-4ebf92fafd2c
விலங்குநல ஆர்வலர்கள் அமைப்பின் வளாகத்தை தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா.சண்முகம் பார்வையிட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முறையற்ற விலங்கு இனப்பெருக்க நடைமுறைகளால் விலங்குநல அமைப்புகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் கவனமாக ஆராய்ந்து வருவதாகத் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான திரு கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விலங்குநல ஆர்வலர்கள் அமைப்பு (Animal Lovers League) எதிர்கொள்ளும் அழுத்தங்கள், சிங்கப்பூரின் செல்லப்பிராணிச் சூழலியலில் காணப்படும் ஆழமான, மேலோட்டமாகத் தெரியாத பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டுகின்றன என்று தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான திரு கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.

கைவிடப்பட்ட அல்லது உரிமையாளர்களால் ஒப்படைக்கப்படும் செல்லப்பிராணிகளின் தொடர்ச்சியான வருகையை நாட்டின் விலங்குநலக் குழுக்கள் தொடர்ந்து கையாள வேண்டிய நிலை இருப்பதாகக் கூறிய அவர், முறையற்ற விலங்கு இனப்பெருக்க நடைமுறைகளிலிருந்தே இந்தப் பிரச்சினை தொடங்குவதாகவும் குறிப்பிட்டார்.

எனினும், அதன் இறுதி விளைவுகளுக்கான சுமைகள் அனைத்தும் விலங்குநலக் குழுக்கள் மீதுதான் விழுகின்றன என்றும் அதிகரித்துவரும் பராமரிப்புச் செலவுகளையும் மிகக் குறைவான வளங்களையும் அக்குழுக்கள் தாங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்றும் திரு சண்முகம் கூறினார்.

விலங்குநல ஆர்வலர்கள் அமைப்பின் வளாகத்தைப் புதன்கிழமை (டிசம்பர் 9) பார்வையிடச் சென்றிருந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அமைப்பின் நோக்கம் கருணையின் அடிப்படையில் வேரூன்றியிருந்தாலும், கடுமையாக நோயுற்ற மற்றும் வயதான விலங்குகளின் நீண்டகாலப் பராமரிப்பிற்கான செலவுமிக்க முறை நிலைத்திருக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டதாகக் குறிப்பிட்டார்.

விலங்குநல ஆர்வலர்கள் அமைப்பின் வளாகத்தைப் பார்வையிட்ட தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான திரு கா.சண்முகம் பின்னர்  செய்தியாளர்களிடம் பேசினார்.
விலங்குநல ஆர்வலர்கள் அமைப்பின் வளாகத்தைப் பார்வையிட்ட தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான திரு கா.சண்முகம் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். - படம்: சாவ்பாவ்

நிதி திரட்டுவதில் ஏற்பட்ட பலவீனம், கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிந்திய கடுமையான நிதி நெருக்கடி, மேலும் பல ஆண்டுகளாகச் செலுத்தப்படாத வாடகை - இவையெல்லாம் சேர்ந்து விலங்குநல மருத்துவச் சேவைக்கு (ஏவிஎஸ்) இடையூறு விளைவிக்கும் நிலைமையை ஏற்படுத்திவிட்டதாக அவர் சொன்னார்.

சிங்கப்பூரின் பழைமையான விலங்குநலக் குழுக்களில் ஒன்றான இந்த அமைப்பு கருணைக்கொலை நடைமுறையைக் கடைப்பிடிப்பதில்லை. மாறாக, வாழ்நாள் இறுதிவரை விலங்குகளைப் பராமரிக்கும் அணுகுமுறையைத் தேர்வுசெய்கிறது. இது செலவுமிக்க பணி என்பதால் வலுவான விளம்பரமும் நிதி திரட்டு முயற்சிகளும் அவசியம் என்றார் திரு சண்முகம்.

“அவர்கள் பெருமுயற்சி செய்தனர். ஆனாலும், போதுமான நிதியை அவர்களால் திரட்ட முடியவில்லை,” என்றார் அவர்.

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வாடகையைச் செலுத்த கால அவகாசத்தை நீட்டிப்பது, தவணைத் திட்டங்களை வழங்குவது உள்ளிட்ட சலுகைகளை ஏவிஎஸ் விலங்குநல ஆர்வலர்கள் அமைப்பிற்கு வழங்கியதாக அமைச்சர் விளக்கினார்.

மேலும், விலங்குநலக் குழுக்களின் செலவுகளைச் சமாளிக்க உதவும் வகையில், விலங்குகள் காப்பகத்தில் (The Animal Lodge) வாடகை விகிதங்கள் ஏற்கெனவே குறைவாகவே வைக்கப்பட்டிருந்ததுடன் சேவை, பராமரிப்புக் கட்டணங்களும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டன.

தன்னார்வலர்களும் தனிமனிதர்களும் விலங்குகளின் நிலை குறித்து எழுப்பிய கவலைகள் உட்பட, நலன் சார்ந்த கருத்துகளைப் பெற்ற பிறகு ஏவிஎஸ் தலையிட வேண்டியிருந்தது. ஓர் அரசாங்க நிறுவனமாக ஏவிஎஸ் நிலையான விதிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

அந்தக் கவலைகளுக்கேற்ப ஏவிஎஸ் நடவடிக்கை எடுக்காவிட்டால், அது கவனக்குறைவாகக் கருதப்படும் அபாயம் உள்ளது என்றும் அவர் சொன்னார்.

“ஓர் அரசு சாரா நிறுவனம் வாடகை செலுத்தாமல் இருக்க ஏவிஎஸ் அனுமதித்தால், மற்றவர்களும் தாங்கள் ஏன் வாடகை செலுத்த வேண்டும் என்று கேட்கலாம். நியாயமாக நடந்துகொள்வது அவசியம்,” என்றார் திரு சண்முகம்.

ஆதரவற்ற விலங்குகள், இனிமேல் யாரும் பராமரிக்க விரும்பாத செல்லப்பிராணிகளைக் கையாள்வது குறித்தும், அவ்விலங்குகளுக்குத் தொடர்ச்சியான கவனிப்பை வழங்குவதில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அத்துறையைக் கவனித்துவரும் தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஆல்வின் டானுடன் பேசியுள்ளதாகவும், அமைச்சு இதை மிகக் கவனமாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

விலங்குநல ஆர்வலர்கள் அமைப்பின் வளாகத்தை தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான திரு கா.சண்முகம் பார்வையிட்டார்.
விலங்குநல ஆர்வலர்கள் அமைப்பின் வளாகத்தை தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான திரு கா.சண்முகம் பார்வையிட்டார். - படம்: சாவ்பாவ்

விலங்குநல ஆர்வலர்கள் அமைப்பு குறித்து அவர் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) வெளியிட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவு தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், அதன் நிறுவனர் திரு மோகனுடனும் அவரது குழுவினருடனும் நீண்டகாலமாகத் தாம் கொண்டிருக்கும் தொடர்புகளின் அடிப்படையிலேயே பேசினேன் என்றும், அமைப்பு விசாரணையில் உள்ளது என்பதைத் தாம் அப்போது அறியவில்லை என்றும் விளக்கமளித்தார்.

குறிப்புச் சொற்கள்