கடன் பெறுவதில் கூடுதல் செலவு, குறைவான லாப ஈவு போன்றவை, இருந்தாலும் சிங்கப்பூர் வர்த்தகங்கள் தங்கள் கடன்களை அடைக்கக்கூடிய நிலையில் செயல்படுகின்றன என்று சிங்கப்பூர் நாணைய ஆணையம் கூறியுள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் நிச்சயமற்ற பொருளியல் நிலை, புவிசார் பதற்றம் ஆகியவை முக்கிய இடையூறுகளாக விளங்கும் என்றும் ஆணையம் முன்னுரைத்துள்ளது.
சிங்கப்பூரில் நிறுவனங்களின் நிதி மீள்திறன் குறித்த வருடாந்தர ஆய்வு மேற்கொண்ட நாணைய ஆணையம் இதைத் தெரிவித்தது. கடந்த நான்கு காலாண்டுகளில் சந்தை நிலை ஏற்றஇறக்கமாக இருந்தபோதிலும் நிறுவனங்களின் வரவுசெலவு நிலைமை சீராக இருந்துள்ளதாக ஆணையம் விளக்கியது.
“மூன்றாம் காலாண்டில் தென்பட்ட வளர்ச்சியால், குறிப்பாக, உற்பத்தி, ஏற்றுமதி சார்ந்த துறைகளில், சிங்கப்பூர் நிறுவனங்கள் பயனடைந்துள்ளன,” என்று நாணையம் குறிப்பிட்டது.
மேலும், உலக அளவிலான வட்டி விகிதங்கள் குறைந்து நிதிச் சந்தையில் கட்டுப்பாடுகள் குறைந்துள்ளதாலும் நிறுவனங்கள் பயன்பெற்றுள்ளன என்று ஆணையம் தனது அறிக்கையில் சுட்டியுள்ளது.
நிறுவனங்களை மதிப்பிடுவதில் நாணையம் நான்கு அம்சங்களை ஆராய்ந்தது. அவை, நிறுவனங்களின் கடன்நிலை, அவற்றை திருப்பிச் செலுத்தும் ஆற்றல், குறுகியகால கடன்களை அடைக்க நிறுவனங்களுக்கு இருக்கும் நிதி வசதி, குறுகியகால கடன்களை ஒத்திப்போடக்கூடிய திறன், மொத்த கடனில் வெளிநாட்டு கடன் அளவு ஆகியவை.
நிறுவனங்களின் லாப ஈவு, கடன் பெறும் செலவு ஆகியவை கூடியுள்ளபோதிலும், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலை குறைவே என்று ஆணையம் தனது அறிக்கையில் விளக்கியது.
இருப்பினும், நிறுவனங்களின் கடன்நிலை கொவிட் கொள்ளைநோய்க்கு முந்தைய காலகட்டத்தில் இருந்ததைவிட குறைவாகவே உள்ளது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

