அமெரிக்கா விவாதங்களில் ஈடுபடாவிட்டாலும் அல்லது பங்கேற்காமல் இருக்க முடிவு செய்தாலும், நாடுகள் ஒன்றிணைந்து தாங்களாகவே முன்னேறும் வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் ஆப்பிரிக்கப் பயணத்தின் முடிவில் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பங்கேற்காத நிலையில், அங்கு நடைபெற்ற ஜி20 உச்சநிலை மாநாட்டில் திரு வோங் கலந்துகொண்டார்.
ஆனால், உலகளாவிய விவகாரங்களின் திசையை வடிவமைக்க அமெரிக்கா இந்த உரையாடல்களில் சுறுசுறுப்பாக ஈடுபட வேண்டும் என்பதே சிங்கப்பூரின் விருப்பம் என்று அவர் கூறினார். அமெரிக்கா தயாராக இருக்கும்போது எந்த நேரத்திலும் இதில் சேரலாம் என்றும் அவர் கூறினார்.
உலகம் பல துருவங்களைக் கொண்டதாக மாறி இருந்தாலும், எல்லா துருவங்களும் ஒரே மாதிரியானவை இல்லை என்று நிதியமைச்சருமான பிரதமர் வோங் தெரிவித்தார்.
“அமெரிக்கா இப்போதைக்கு, இன்னும் மிகப்பெரியதாக விளங்குகிறது. மேலும், அமெரிக்கத் தலைமைத்துவம் அந்த உலகளாவிய கட்டமைப்பை வழங்குவதில் இன்றியமையாதது,” என்று அவர் மேலும் கூறினார்.
ஜி20 உச்சநிலை மாநாட்டிற்காக தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிற்கு மேற்கொண்ட பயணத்தைத் தொடர்ந்து, எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) பேசினார்.
தென்னாப்பிரிக்கா, தனது ஆப்பிரிக்க வெள்ளையர் சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதாகக் கூறும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்காக திரு டிரம்ப் உச்சநிலை மாநாட்டைப் புறக்கணித்தார்.
இதற்கிடையே, 2026ஆம் ஆண்டில் அமெரிக்கா ஜி20 உச்சநிலை மாநாட்டுக்குத் தலைமை தாங்க உள்ளது.
இந்தப் பதற்றங்களின் பின்னணியில், ஜி20 உச்சநிலை மாநாடு மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது என்று கூறிய பிரதமர் வோங், இதுபோன்ற தளங்கள் நாடுகளை ஒன்றிணைத்து ஈடுபட வைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வேறுபாடுகள் இருந்தபோதிலும், மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து நாடுகளும் ஜோகன்னஸ்பர்க்கில் ஒரு பிரகடனத்தை வெளியிட ஒன்றிணைந்ததில் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார். முன்னோக்கிச் செல்லும் வழியில் சில ஒருமித்த கருத்து இருந்தது. மேலும், அது மிகவும் பயனுள்ள விளைவை ஏற்படுத்துகிறது என்றும் பிரதமர் கூறினார்.
இந்த ஆண்டு ஜி20 மற்றும் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்புக் கூட்டங்களில், உலக வர்த்தக அமைப்பைச் சீர்திருத்தம் செய்யுமாறு உலகத் தலைவர்களிடம் பிரதமர் வோங் வேண்டுகோள் விடுத்தார்.
இதுகுறித்து கேட்டபோது, உலக வர்த்தக அமைப்பு, அனைத்துலக பண நிதியம் அல்லது உலக வங்கி போன்ற அமைப்புகளின் வழியாகச் செல்வது ஒரு வழி என்று அவர் கூறினார்.
உலக வர்த்தக அமைப்பை புதுப்பிப்பது என்பது ஒரு சிக்கலான பணியாகும். ஆனால் அமெரிக்காவின் ஈடுபாடு இல்லாமல் அது இன்னும் கடினமாக இருக்கும் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
ஆனால், உலகின் மற்ற நாடுகள் விட்டுக்கொடுக்கக் கூடாது. வேறு வழிகளில் தொடர்ந்து போராட வேண்டும் என்று அவர் கூறினார்.

