நியாயமற்ற விற்பனை முறைகளைக் கையாண்டதன் பேரில் குடிநுழைவு ஆலோசனை நிறுவனங்கள் இரண்டுக்கும் அதன் நடத்துநருக்கும் எதிராக சிங்கப்பூர்ப் போட்டித் தன்மை, பயனீட்டாளர் ஆணையம், நீதிமன்ற ஆணைகளைப் பெற்றுள்ளது.
‘விஇடி இமிகிரேஷன்ஸ்’, ‘சவா இமிகிரேஷன்ஸ் ஆகியவற்றுடன் ‘பால் இமிகிரேஷன்ஸ்’ என்ற நிறுவனம், சிங்கப்பூர் நிரந்தரவாசத்திற்கு விண்ணப்பிப்பதற்கு உடனடி தேவை இருப்பதாகப் பொய்யுரைத்து தங்கள் மூலமாகப் பெறப்படும் நிரந்தரவாச விண்ணப்பங்கள் வெற்றிகரமாக இருக்கும் என்று போலியாக உத்தரவாதம் அளித்தன.
இந்த நிறுவனங்களின் தில்லுமுல்லைத் தீட்டியவர் திரு செங் யோங் டெக் என்று ஆணையம், திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) வெளியிட்ட செய்தியாளர் அறிக்கையில் குறிப்பிட்டது.
பால் இமிகிரேஷன்ஸ் நிறுவனத்தின் விற்பனை முறைகளின் தொடர்பில் புகார்களைச் சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கம் பெற்றதைத் தொடர்ந்து விசாரணைகள் தொடங்கின.
ஜனவரி 2020லிருந்து அந்நிறுவனம் பற்றி இதுவரையில் 183 புகார்கள் பெற்றதாக பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங் தெரிவித்தார்.
இத்தகைய விற்பனை முறைகளை பால் இமிகிரேஷன்ஸ் 2021ல் நிறுத்த ஒப்புக்கொண்டாலும் அதன்மீது புகார்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்டன.
திரு செங், பால் இமிகிரேஷன்ஸ் நிறுவனத்தை மூடியுள்ளபோதும் விஇடி இமிகிரேஷன்ஸ், சவா இமிகிரேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின்வழியாக அதே முறையில் செயல்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.