கடன்பற்று அட்டை நிலுவைத் தொகை பத்தாண்டு உச்சத்தைத் தொட்டது

1 mins read
a181931b-c3dd-48da-9775-c079f55dd326
2025 மூன்றாம் காலாண்டில் கடன்பற்று அட்டை நிலுவைத் தொகை S$9 பில்லியனைக் கடந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

குறித்த தேதிக்குள் செலுத்தப்படாத கடன்பற்று அட்டை பாக்கித் தொகையின் அளவு பத்தாண்டு உச்சத்தைத் தொட்டுள்ளதாக சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.

கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வாடிக்கையாளர்கள் தங்களது கடன்பற்று அட்டை பாக்கியைச் செலுத்தவில்லை எனில், அந்தத் தொகை வட்டியுடன் அடுத்த மாதத்திற்குக் கொண்டு செல்லப்படும்.

இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில், அவ்வாறு மறுமாதத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலுவைத் தொகை S$9 பில்லியனைக் கடந்துவிட்டது.

கடந்த 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வளவு அதிகமான நிலுவைத் தொகை சேர்ந்திருப்பது அந்தக் காலாண்டில்தான்.

குறிப்பாக, கடந்த 2021ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு முதலே, அடைக்கப்படாத கடன்பற்று அட்டைக் கடன் தொகை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.

அந்தக் காலாண்டில் செலுத்தப்படாத கடன்தொகை S$5.19 பில்லியனாக இருந்தது என்று புள்ளிவிவரத் துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் தங்களது வரம்புக்குள் செலவுகளை வைத்துக்கொள்ளாதது, ஆடம்பரப் பொருள்களுக்கு ஆசைப்படும் பயனீட்டாளர்களின் போக்கு, இப்போது வாங்கிவிட்டு பிறகு பணத்தைச் செலுத்தும் வசதி போன்றவையே இந்தக் கடன்தொகை பெருக்கத்திற்குக் காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.

இது கவலை தரும் போக்கு என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு கடன்பற்று அட்டைக் கடன் அதிகரிப்பதற்கு, விலைவாசி உயர்வுக்கிடையே சிங்கப்பூரர்கள் எதிர்நோக்கும் நிதிச் சிரமங்களும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஒரு பகுப்பாய்வாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்