அரசாங்கம் நிர்வகிக்கும் நிலையங்களில் தகன, நல்லடக்க, அஸ்திமாடச் சேவைகளுக்கான கட்டணங்கள் 2027 ஜனவரியிலிருந்து உயர்த்தப்படவுள்ளன. 25 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதேவேளையில், நிலப்பயன்பாட்டைக் குறைப்பதை ஊக்குவிக்கும் வகையில், நிலத்தில் அஸ்தி கரைக்கும் சேவைக்கான கட்டணம் குறைக்கப்படுவதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) அறிவித்தது.
வெளிநாட்டினர்க்குக் கூடுதல் கட்டணம்
புதிய மாற்றத்தின்படி, சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளுக்கான தகனக் கட்டணம் $100லிருந்து $175ஆகவும் வெளிநாட்டினருக்கு $100லிருந்து $350ஆகவும் உயரும்.
சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளுக்கான கட்டாய நல்லடக்கக் கட்டணம் $315லிருந்து $400 ஆகவும், கட்டாயமற்ற நல்லடக்கக் கட்டணம் $940லிருந்து $1,200ஆகவும் அதிகரிக்கப்படும். வெளிநாட்டினருக்கான நல்லடக்கக் கட்டணம் $1,880லிருந்து $2,500ஆக உயரும். கட்டாய நல்லடக்கம் என்பது முஸ்லிம் போன்ற சமயக் காரணங்களால், ஒருவர், கட்டாயமாக நல்லடக்கம் செய்யப்படுவதைக் குறிக்கும்.
அஸ்திமாடக் கட்டணம் $500லிருந்து $600ஆகவும், குடும்ப அஸ்திமாடக் கட்டணம் $900லிருந்து $1,080ஆகவும் உயர்த்தப்படுகிறது.
1997, 2000ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு கட்டுமானம், பராமரிப்பு, மின்சாரம், தண்ணீர் போன்ற பயன்பாட்டுச் செலவும் செயல்பாட்டுச் செலவும் அதிகரித்துள்ளதால், 20 முதல் 65 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாகச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.
25 ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில், கட்டாய நல்லடக்கச் சேவைகளை வழங்குவதற்கான செலவு ஒருவருக்கு $1,690க்கும் அதிகமாகவும், தகனச் சேவைக்கான செலவு $320க்கும் அதிகமாகவும், சாதாரண அஸ்திமாடத்திற்கான செலவு $580க்கும் அதிகமாகவும் உயர்ந்துள்ளது.
எனினும், சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளின் முக்கியச் சேவைகளுக்கான செலவில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டை அரசாங்கமே தொடர்ந்து ஏற்கும்.
நிலத்தில் அஸ்தி கரைக்கும் கட்டணம் $320லிருந்து $200 ஆகக் குறைக்கப்படுகிறது.
இதனால் தகனத்துக்கும், நிலத்தில் அஸ்தி கரைப்பதற்குமான மொத்தக் கட்டணம் $420லிருந்து $375ஆகக் குறையும்.
அஸ்தி கரைக்க படகுச் சேவை 2027ல் அறிமுகம்
கடலில் அஸ்தி கரைப்பதற்கான படகுச் சேவையை 2027ஆம் ஆண்டின் பிற்பாதியில் அமைப்பு அறிமுகப்படுத்தப்படும். ஆறு பேர் கொண்ட குழுவிற்கு இதற்கு $50 கட்டணம் வசூலிக்கப்படும்.
காம்கேர் அல்லது காம்லிங்க்+ (ComLink+) உதவி பெறும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு, 2027 ஜனவரியிலிருந்து அத்தியாவசிய இறுதிச்சடங்குக் கட்டணங்களிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும்.
ஆண்டுதோறும் ஏறக்குறைய 1,100 குடும்பங்கள் இதன்மூலம் பயனடையும். நிதி நெருக்கடியில் உள்ள பிற குடும்பங்களும் உதவி கோரிச் சுற்றுப்புற அமைப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
சிங்கப்பூரின் மூப்படையும் மக்கள்தொகையால் ஆண்டு இறப்பு எண்ணிக்கை 2040ஆம் ஆண்டில் ஏறக்குறைய 40,000 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை எதிர்கொள்ள, 12 இறுதிச்சடங்குக் கூடங்களைக் கொண்ட புதிய மவுண்ட் வெர்னான் வளாகம் 2027ல் திறக்கப்படவுள்ளது.
