காமன்வெல்த் கட்டுரைப் போட்டியில் சாதித்த கிரசண்ட் பெண்கள் பள்ளி மாணவி

2 mins read
86787585-5d14-436f-aa60-5e18f98dd86d
அச்சந்தா லக்‌‌ஷ்மி மனோக்னியா, இளையர் பிரிவில் இரண்டாம் நிலையில் வந்ததற்கான சான்றிதழை நவம்பர் 20ஆம் தேதி, பிரிட்டி‌ஷ் அரசியார் கமீலாவிடமிருந்து பெற்றார். - படம்: அச்சந்தா லக்‌‌ஷ்மி மனோக்னியா

சிங்கப்பூரின் கிரசண்ட் பெண்கள் பள்ளி மாணவி அச்சந்தா லக்‌‌ஷ்மி மனோக்னியா, காமன்வெல்த் கட்டுரைப் போட்டியில் சாதனை படைத்திருக்கிறார்.

14 வயதுக்கு உட்பட்ட இளையர் பிரிவில், அவர் இரண்டாம் நிலையில் வந்தார்.

அக்டோபர் மாதம் சாதனைச் செய்தி கிடைத்த ஒரு மாலை வேளையில், மனோக்னியா உறங்கிக்கொண்டிருந்தார். அவரை உலுக்கி எழுப்பினார் அவரின் மூத்த சகோதரி.

“மனோ, நாம் பக்கிங்ஹாம் அரண்மனைக்குப் போகப்போகிறோம்!” என்று அவரின் சகோதரி கூச்சலிட்டார்.

அரசியாரின் காமன்வெல்த் கட்டுரைப் போட்டி 2025ல் இரண்டாம் நிலையில் வந்ததை அப்போதுதான் உணர்ந்தார் கிரசண்ட் பெண்கள் பள்ளியின் 14 வயது மாணவி மனோக்னியா. அவரின் தாயாருக்கு ஏற்பாட்டாளர்கள் மின்னஞ்சலையும் அனுப்பியிருந்தனர்.

காமன்வெல்த் கட்டுரைப் போட்டி, 1883ல் தொடங்கப்பட்டது. பள்ளிகளுக்கான ஆகப் பழைமையான அனைத்துலக எழுத்துப் போட்டி அது.

போட்டிக்கு 54 காமன்வெல்த் நாடுகளிலிருந்து 53,400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன. அது புதிய சாதனை. சென்ற ஆண்டுடன் (2024) ஒப்பிடுகையில் எண்ணிக்கை, 53 விழுக்காடு அதிகம் என்று அரசு காமன்வெல்த் சமுதாயக் கட்டமைப்பு தெரிவித்தது.

இளையர் பிரிவில் வெற்றிபெற்றவர், இந்தியாவின் விவான் அகர்வால்.

மூத்தோர் பிரிவில், இந்தியாவின் கைரா பூரி வாகை சூடினார். நைஜீரியாவின் பண்டோரா ஒனிடைர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

வெற்றிபெற்ற நால்வரும் நவம்பர் மாதத்தில் ஒரு வாரம் பிரிட்டனுக்குச் சென்றிருந்தனர். வெஸ்ட்மின்ஸ்டர் அபே, ஜேன் ஆஸ்டன்ஸ் ஹௌஸ் போன்ற வரலாற்று, கலாசாரத் தலங்களுக்கு அவர்கள் சென்றிருந்தனர்.

செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் நவம்பர் 20ஆம் தேதி நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் பிரிட்டி‌‌ஷ் அரசியார் கமீலா நால்வருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்தியாவில் பிறந்தவரான மனோக்னியா, ஆறு மாதக் குழந்தையாக இருந்தபோது சிங்கப்பூருக்கு வந்தார். இப்போது அவர் இங்கு நிரந்தரவாசியாக இருக்கிறார். இவ்வாண்டுப் போட்டியின் கருப்பொருள்: நமது காமன்வெல்த் பயணம். அதன் தொடர்பில் இந்தியாவைப் பற்றி எழுத விரும்பினார் மனோக்னியா.

அவர் எழுதிய கவிதையின் தலைப்பு, ‘இந்தியாவிலிருந்து மொரீ‌ஷியஸ் வரை’. அம்மாவிடமிருந்து பிரிக்கப்பட்டு இந்தியாவிலிருந்து மொரீஷியசுக்குக் கொண்டுசெல்லப்பட்ட ஒரு குரங்கின் கதையை அது விவரிக்கிறது. ஒரு குரங்கின் பார்வையிலிருந்து அதன் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் கவிதை அமைந்திருந்தது.

குறிப்புச் சொற்கள்