சிங்கப்பூரின் வளர்ச்சிக்குப் பல்வேறு விதங்களில் பங்களிப்பதுடன், தங்களது கலாசாரக் கூறுகள் சிலவற்றையும் கைவிடாது கடைப்பிடிக்கும் வெளிநாட்டு ஊழியர் நால்வரின் கதைகள் பொதுப் போக்குவரத்தில் இடம்பெற்றுள்ளன.
அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினக் கொண்டாட்டத்தையொட்டி, மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ (Assurance, Care and Engagement) எனப்படும் உத்தரவாதம், பராமரிப்பு, ஈடுபாட்டுக் குழு, எஸ்எம்ஆர்டி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தியுள்ள இந்த முன்னெடுப்பில் அவர்களின் கதைகள் இடம்பெற்றுள்ளன.
இதில், பறையிசைக் கலைஞர் குமார், இந்தோனீசியப் பாரம்பரிய நடனக் கலைஞர் ஜேந்தி, பிலிப்பீன்ஸ் நாட்டின் தற்காப்புக் கலையான ‘டேப்போன்டோ’ (Tapondo) நிபுணர் டோனிகா, பங்ளாதேஷின் பாரம்பரிய உணவைக் கனிவுடன் சமைக்கும் ரசேல் ஆகியோரின் கதைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த முன்னெடுப்பின்கீழ், வடக்கு-தெற்கு ரயில் பாதையில் சேவை வழங்கும் ஒரு ரயிலில் இவை சித்திரிக்கப்பட்டுள்ளன.
இந்தக் ‘கருப்பொருள் ரயில்’ஐ (Concept Train) மனிதவள அமைச்சின் (வேலையிடங்கள்) துணைச் செயலாளர் ஜோன் மோ, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி திங்கட்கிழமை (டிசம்பர் 1), அங் மோ கியோ ரயில் நிலையத்தில் நடைபெற்றது.
ரயிலில் சித்திரிக்கப்பட்டுள்ள ஊழியர்களிடம் கலந்துரையாடினார் திருவாட்டி ஜோன். “இச்சமூகத்தின் கலாசார வளத்தை மேம்படுத்தும் வண்ணம் அமைந்த உங்கள் வாழ்வின் சுவைமிக்க பகுதிகள் குறித்துப் பகிர்ந்துள்ளீர்கள். சிங்கப்பூரர்களுக்கு உங்கள் கதைகள், கலாசார நடைமுறைகளை அறிந்துகொள்ளவும் உங்கள் பங்களிப்புகளை அங்கீகரித்துப் பாராட்டவும் இது வாய்ப்பளித்துள்ளது,” என்றார் அவர்.
மேலும், அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினத்திற்காகப் பள்ளிகள், சமூக அமைப்புகள், அடித்தள அமைப்புகள், பெருநிறுவனங்கள் என 160 பங்காளித்துவ அமைப்புகள் இணைந்துள்ளன என்றும் அவர் சொன்னார்.
இந்தக் ‘கருப்பொருள் ரயில்’ முன்னெடுப்பு கலாசாரத்தை மையமாகக் கொண்டு, வெளிநாட்டு ஊழியர்களின் கலாசாரக் கூறுகளை எடுத்துரைப்பதுடன் அவர்களுக்கும் உள்ளூர்ச் சமூகத்துக்குமான பிணைப்புகளையும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இல்லப் பணியாளர்கள், வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கையைப் பொதுமக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக, டிசம்பர் 1 முதல் 14ஆம் தேதிவரை இவை இடம்பெறும். இது ஏறத்தாழ 200,000 பயணிகளைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருப்பொருள் ரயிலில் இடம்பெற்றுள்ள நான்கு கதைகளில் ஒன்று பறையிசைக் கலைஞரான 39 வயது தங்கேஸ்வரன் குமாரின் கதை. “நான் கடந்த 15 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் பணியாற்றுகிறேன். சிறு வயதிலிருந்தே பறையிசைக் கலைமீது ஆர்வம் அதிகம். தொடக்கத்தில் பணிச்சுமை காரணமாக இதனைத் தொடர முடியாமல் போனாலும், வெளிநாட்டு ஊழியர்கள் நிலையத்தில் சக ஊழியர்களுடன் இணைந்து மீண்டும் தொடங்கினேன். அது மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது,” என்றார் அவர்.
தமது கதை பொதுப்போக்குவரத்தில் இடம்பெற்றிருப்பது தமக்கு மட்டுமன்றி, நண்பர்கள், குடும்பத்தினருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியளிப்பதாக அவர் சொன்னார்.
மேலும், தாம் மட்டுமன்றி, தம்மைப் போன்ற பிற ஊழியர்கள் சிங்கப்பூருக்கு அளிக்கும் பங்களிப்புகள், தங்களுக்குள் இருக்கும் திறமைகள், வெவ்வேறு கலாசாரங்கள் எனப் பலவற்றையும் இதன் மூலம் மக்கள் அறிந்துகொள்வார்கள் என நம்புவதாகவும் குமார் குறிப்பிட்டார்.

