இலங்கையைப் பாழ்படுத்திய சூறாவளியால் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வீடு, உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு மனிதாபிமான உதவி வழங்கும் நோக்கத்தோடு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
அந்த முயற்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிங்கப்பூர் அரசாங்கம் 100,000 வெள்ளி நிதி வழங்க முன் வந்துள்ளது.
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவ, செஞ்சிலுவைச் சங்கம் 50,000 வெள்ளிக்கான ஆதரவு தெரிவித்துள்ளது. அதற்கு அரசாங்கத்தின் பங்களிப்பு உறுதுணையாக இருக்கும் என்று டிசம்பர் 12ஆம் தேதி வெளியுறவு அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
நவம்பர் பிற்பகுதியில் இலங்கையை டிட்வா சூறாவளி தாக்கியது. இதனால் பல இடங்களில் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. சூறாவளி ஏற்படுத்திய சேதங்களை சீர் செய்ய குறைந்தது ஏழு பில்லியன் யுஎஸ் டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். இது, இலங்கையின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய பத்து விழுக்காடாகும். இதுவரை இல்லாத மோசமான இந்தப் பேரிடரில் 630 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
அதிபர் தர்மன் சண்முகரத்னமும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் முறையே இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகவுக்கும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத்துக்கும் எழுதியுள்ள கடிதத்தில் புயலால் பலர் உயிரிழந்ததற்கு தங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
டிட்வா சூறாவளி வீடுகள், சாலைகள் மற்றும் முக்கிய விவசாய நிலங்களைச் சேதப்படுத்தியிருப்பதால் அதிகமான குடும்பங்கள் வறுமையில் உள்ளன. எனவே, இலங்கையின் பலவீனமான பொருளியல் மீட்சியடைய தாமதமாகும் என்று பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இலங்கை, பல பத்து ஆண்டுகளில் இல்லாத மோசமான பொருளியல் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இது, 2022ல் உச்சத்தை எட்டியது. அப்போது தாக்கிய புயலால் 22 மில்லியன் மக்கள் தொகையில் 25 விழுக்காட்டினர் வறுமையில் தள்ளப்பட்டனர்.

