நடனக் கலைஞர் வசந்தா காசிநாத் காலமானார்

2 mins read
2663f77b-af32-4a84-bfec-bd424f226615
திருவாட்டி வசந்தா காசிநாத். - படம்: ஏ கே ஆர்ட்ஸ் லிமிட்டெட்

சிங்கப்பூரின் புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர் திருவாட்டி வசந்தா காசிநாத் புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 79.

‘வசந்தா காசிநாத் கலாநிலையம்’ எனும் நடனப் பள்ளியை நிறுவிய இவர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏறத்தாழ 3,000 மாணவர்களுக்கு நடன ஆசிரியராகத் திகழ்ந்தவர். உலகெங்கிலும் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு நடன நிகழ்ச்சிகளைப் படைத்துள்ளார்.

திருவாட்டி வசந்தா தொடர்ந்து 31 ஆண்டுகள் சமூக நிலையங்களில் நடன வகுப்புகளை நடத்தியதற்காக கடந்த 2014ஆம் ஆண்டு நீண்டகால சேவை விருதை வென்றார். கடந்த 1963ஆம் ஆண்டு முதன்முதலில் சிங்கப்பூரில் தொலைக்காட்சி அறிமுகமானபோது அதன் தொடக்க நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று நடனமாடியது குறிப்பிடத்தக்கது. 

‘நாட்டிய ஆச்சார்ய மணி’ எனும் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார் திருவாட்டி வசந்தா. பள்ளி, கல்லூரி மாணவர்களைத் தமது தனித்துவமான நடனப் பயிற்றுவிப்பு முறை மூலம் ஈர்த்தவர். 

சிங்கப்பூரின் பல்வேறு கலை அமைப்புகள் அவருக்கு ‘நாட்டியக் கலா நிபுணா’, ‘நாட்டியக் கலா சாகரம்’ உள்ளிட்ட பட்டங்களையும் விருதுகளையும் வழங்கிச் சிறப்பித்துள்ளன. 

திருவாட்டி வசந்தாவின் மறைவு மிகுந்த வருத்தமளிப்பதாகக் கூறினார் பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமியின் இசை இயக்குநர் டாக்டர் கானவினோதன் ரத்தினம்.

“அவரது பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நான் இசையமைத்துள்ளேன். ஈராண்டுகளுக்குமுன் அவர் நடத்திய இறுதி அரங்கேற்றம் வரை அவருடன் பயணம் செய்துள்ளேன். அவர் நடனப் பாரம்பரிய முறைகளிலிருந்து சற்றும் மாறுபடாத கலைஞர். அது அவரது தனிச்சிறப்பு,” என்றார்.

“அவரிடம் நடனம் பயின்ற மாணவர்கள் மூலம் அவரது கலை என்றும் இங்கு நிலைத்து நிற்கும் என நம்புகிறோம். அவர்களுக்கு உறுதுணையாகவும் செயல்படுவோம்,” என்றும் அவர் சொன்னார்.

அவரிடம் ஏழாண்டுகள் நடனம் பயின்ற மாணவியான அனு‌‌‌ஷா செல்வமணி, 27, திருவாட்டி வசந்தாவின் மறைவு தமக்குப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார். அவர், “கண்டிப்பான நடன ஆசிரியராகவும் அதே நேரத்தில் அன்பும் அரவணைப்பும் அளிப்பவரும் அவர். தாயுள்ளம் கொண்ட அவரது நடன வகுப்புகளில் பங்கேற்க எனக்கு எப்போதும் ஆவல் இருந்தது,” என்றார்.

“அவரைச் சிறு வயதிலிருந்தே பார்த்து வளர்ந்தேன். என்னுடைய தாயாருக்கும் அவருக்குமான நட்பு ஆழமாக இருந்தது. அவரது இழப்பு கலைத் துறைக்கே பேரிழப்புதான்,” என்றார் பிரபல கலைஞர் மனு­நீ­தி­வதி முத்­து­சாமியின் மகளான விக்னேஸ்வரி வடிவழகன்.

தமது நிகழ்ச்சி ஒன்றுக்கு திருவாட்டி வசந்தா தாமே முன்வந்து நடனம் அமைத்துத் தந்ததை நினைவுகூர்ந்த அவர், “சிங்கப்பூரின் முன்னோடிக் கலைஞராகவும், பலருக்கு முன்மாதிரியாகவும் திகழ்ந்த திருவாட்டி வசந்தா, கொண்டாடப்பட வேண்டியவர். அவரது கலைச் சேவை குறித்து சிங்கப்பூரர்கள் பெருமை கொள்ள வேண்டும்,” என்றும் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்