சிங்கப்பூரில் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்தோர் கடனட்டைகளைப் பெறுவதற்கு டிபிஎஸ், ஓசிபிசி, யூஓபி ஆகிய வங்கிகள் புதிய ஏற்பாடு ஒன்றைச் செய்துள்ளன.
மத்திய சேம நிதி லைஃப் பேஅவுட் (CPF Life Payout) ஓய்வுக்கால வழங்குதொகை பெறுபவர்கள் அதனை வருமானமாகக் காட்டி கடனட்டைக்கு விண்ணப்பம் செய்யலாம்.
இந்த ஏற்பாடு புதன்கிழமை (ஜூன் 11) முதல் நடைமுறைக்கு வரும் என்று டிபிஎஸ், ஓசிபிசி வங்கிகள் தெரிவித்தன.
யூஓபி கூடிய விரைவில் இந்த ஏற்பாட்டை நடைமுறைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தது.
மசேநி லைஃப் பேஅவுட் என்பது மூத்தோர் தங்களது மத்திய சேம நிதியின் ஓய்வுக் கணக்கில் வைத்துள்ள பணத்திலிருந்து ஒரு தொகையை மாதந்தோறும் பெறுவார்கள்.
ஓய்வுக் கணக்கில் இருக்கும் பணத்தைப் பொறுத்து நிதி வழங்கப்படும். அந்த ஓய்வூதிய நிதியை 65 வயது முதல் பெற்றுக்கொள்ளலாம்.