கடனடைப்புத் திட்டத்தைத் தவறான முறையில் பயன்படுத்தும் கடன் ஆலோசனை நிறுவனங்களைக் குறிவைத்து சட்ட அமைச்சு பரிந்துரைகளை முன்வைக்க இருக்கிறது.
நொடித்துப் போகாமல் இருக்க தனிநபர்களுக்கு உதவும் திட்டத்துடன் தொடர்புடைய சட்டங்கள் கடுமையாக்கப்படும்.
கடன் தொகையிலிருந்து தள்ளுபடி பெற, கடன் வாங்கிய பிறகு நொடிப்புநிலைக்கு விண்ணப்பம் செய்ய ஊக்குவிக்கும் நிறுவனங்களை அதிகாரிகள் குறிவைக்கின்றனர்.
இத்தகைய நிறுவனங்கள் சட்ட அமைச்சால் நிர்வகிக்கப்படும் கடனடைப்புத் திட்டத்தைத் தவறான முறையில் பயன்படுத்துகின்றன.
இத்தகைய செயல்களில் ஈடுபடும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகச் சட்ட அமைச்சு திங்கட்கிழமையன்று (ஜூன் 9) தெரிவித்தது.
கடனடைப்புத் திட்டத்துக்கு ஒருவர் உட்படும்போது நொடிப்புநிலையை அவர் தவிர்க்கலாம்.
ஆனால், நொடிப்புநிலைக்கு அவர் முதலில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
அதன் பிறகே அவரை அத்திட்டத்தின்கீழ் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
கடன் வாங்கியோரிடமிருந்து பேரளவிலான கட்டணங்களை ஆலோசனை நிறுவனங்கள் வசூலிப்பதாகவும் அதற்கான பணத்தைத் திரட்ட கடன் கொடுப்பவர்களிடமிருந்து கடன் வாங்க அவர்களை ஊக்குவிப்பதாகவும் நிதி அமைச்சு கூறியது.
இதன் விளைவாக நொடிப்புநிலையை எட்ட ஆலோசனை நிறுவனங்களின் உதவியை நாடி, அதற்கான கட்டணத்தைச் செலுத்த பொறுப்பற்ற வகையில் கடன் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அமைச்சு தெரிவித்தது.
2024ஆம் ஆண்டில் 2,928 பேர் நொடிப்புநிலைக்கு விண்ணப்பம் செய்ததாக சட்ட அமைச்சு வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.
அந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் அவை 59 விழுக்காடு.
இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள புதிய சட்டம் ஒன்றை அமைச்சு பரிந்துரை செய்துள்ளது.
நொடிப்புநிலைக்கு விண்ணப்பம் செய்யத் தூண்டுவதைக் குற்றமாக்க அது பரிந்துரை செய்துள்ளது.
வழக்கறிஞர்கள், கணக்காளர்கள், நிதி ஆலோசகர்கள் போன்ற குறிப்பிட்ட சில நிபுணர்களும் அங்கீகரிக்கப்பட்ட அறநிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கு.
இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் குற்றம் புரிபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை, $10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

